2009-07-20 15:43:58

மனிதன் நிலவில் நடந்த நாற்பது ஆண்டுகள் நிறைவையொட்டிய திருப்பீட பேச்சாளரின் சிந்தனைகள்


ஜூலை20,2009. மனிதன் நிலவில் காலடி வைத்து நாற்பது ஆண்டுகள் இன்று நிறைவுற்றுள்ள நிலையில் அந்நாளில் திருத்தந்தை ஆறாம் பவுல் இவ்வரலாற்று நிகழ்வை மனதாரப் பாராட்டியதைத் திருப்பீட பேச்சாளர் அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி நினைவுகூர்ந்தார்.

மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைக்க நடத்தப்பட்ட அனைத்துத் தயாரிப்புக்களின் போதும் அவன் வெற்றியோடு திரும்பி வந்த போதும் திருத்தந்தை தனது பாராட்டுதல்களை வழங்கி மனிதனின் அறிவுத்திறமையைப் பாராட்டிக் கொண்டிருந்தார் என்று கூறிய திருப்பீட பேச்சாளர், நிலவுக்குச் சென்ற முதல் மனிதர்களுடன் திருத்தந்தை நடத்திய சந்திப்பையும் சுட்டிக்காட்டினார்.

1969ம் வருடம் ஜூலை மாதம் 20ம் தேதி நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் அதே ஆண்டு அக்டோபர் 16ம் நாள் திருத்தந்தை ஆறாம் பவுலைத் திருப்பீடத்தில் சந்தித்து 48 பவுண்டு எடையுடைய சந்திரக்கல் ஒன்றை அவருக்குப் பரிசளித்ததையும் அக்கல் இன்றும் காஸ்தெல் கன்டோல்போ வத்திக்கான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார் அருள்தந்தை லொம்பார்தி.

எந்த ஒரு முன்னேற்றமும் உண்மையான மனிதகுல மற்றும் ஒழுக்கரீதி முன்னேற்றத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும் என திருத்தந்தை ஆறாம் பவுல் அந்நாளில் அழைப்புவிடுத்ததையும் திருப்பீட பேச்சாளர் நினைவுகூர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.