2009-07-18 15:49:04

ஹொண்டுராசில் அரசியல் தீர்வு காண அமெரிக்க ஆயர்கள் ஹில்லரிக்கு அழைப்பு


ஜூலை18,2009. மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராசில் மோதல்கள் மேலும் இடம் பெறுவதைத் தவிர்க்கும் விதமாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அந்நாட்டு செயலர் ஹில்லரி ரோடுஹாம் கிளிண்டனை வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சர்வதேச கொள்கைக்கான ஆணையத் தலைவர் ஆயர் ஹவார்டு ஹூபார்டு, ஹில்லரி கிளிண்டனுக்கு அனுப்பிய கடிதத்தில், ஹொண்டுராஸ் மக்கள் தற்போதைய அரசியல் பிரச்சனையிலிருந்து வெளிவரவும் அதற்கு அமைதியான தீர்வு காணப்படவும் உதவுமாறு கேட்டுள்ளார்.

ஹொண்டுராஸ் அரசுத்தலைவர் மானுவேல் ஜெலாயா, தனது பதவி காலத்தை நீட்டிப்பதற்கான முயற்சியில் அரசியல் சாசன சட்டத்தை மீறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஜூன் 28ம்தேதி அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டில் கலகம் வெடித்தது.

எனினும் இம்மாதம் 7ம் தேதி கோஸ்ட்டா ரிக்கா அரசுத்தலைவரின் தலைமையில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இஞ்ஞாயிறன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்னும் தலத்திருச்சபைத் தலைவர்களும், மற்ற நாடுகளின் திருச்சபைத் தலைவர்களும் ஹொண்டுராஸ் நாட்டில் அமைதியும் ஒப்புரவும் இடம் பெற ஏற்கனவே அழைப்புவிடுத்துள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.