2009-07-18 15:47:58

கர்தினால் ஷான் மார்ஜெயோ குடும்பங்களின் முன்னேற்றத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்து உழைத்து வந்தார், திருத்தந்தை


ஜூலை18,2009. மறைந்த கர்தினால் ஷான் மார்ஜெயோ குடும்பங்களின் முன்னேற்றத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்து உழைத்து வந்தார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாராட்டினார்.

மொரீஸியஸ் நாட்டு கர்தினால் ஷான் மார்ஜெயோ இவ்வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்ததை முன்னிட்டு அத்தலத்திருச்சபைக்கு இரங்கல் தந்தி அனுப்பிய திருத்தந்தை, கர்தினாலின் இறப்பு குறித்தத் தனது வருத்தத்தைத் தெரிவித்த அதேவேளை, மொரீஸியஸ் மக்களுக்காகத் தன்னையே முழுமையாக ஆர்வமுடன் அர்ப்பணித்த நல்ல மேய்ப்பர் அவர் என்று புகழ்ந்துள்ளார்.

93 வயதாகும் இக்கர்தினாலின் மறைவோடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 185 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆகவும் உள்ளன.

மேலும் கர்தினால் மார்ஜெயோ நற்செய்திப் பணிக்கும் குடும்ப மதிப்பீடுகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கும் ஆர்வமாக உழைத்தவர் என்றும் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாட்டில், இந்து மற்றும் முஸ்லீம் மக்களுடன் நல்லுறவைக் காப்பதில் கவனமுடன் செயல்பட்டவர் என்றும் தலத்திருச்சபை கூறுகிறது.

இந்துக்கள் மதமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அறிந்திருந்த மறைந்த கர்தினால், தனது முன்மாதிரிகையான வாழ்வாலும் கிறிஸ்தவப் போதனைகளை நன்கு அறியச் செய்வதன் மூலமும் நற்செய்திப்பணி செய்தார் என்று தலத்திருச்சபை பாராட்டுகிறது.

இவரின் தவக்கால மற்றும் தூயஆவிப் பெருவிழாவுக்கான மேய்ப்புப்பணி அறிக்கைகள் தேசிய அளவில் ஊடகங்களில் வெளியிட்டன என்பது குறிப்பிடதக்கது.

இந்தியப் பெருங்கடலிலுள்ள மொரீஸியஸ் தீவு நாட்டில் ஏறத்தாழ பாதிப்பேர் இந்துக்கள். இவர்களின் மூதாதையர் இந்தியர்கள். இன்னும் சுமார் 16 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் மற்றும் ஏறத்தாழ 24 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.