2009-07-18 15:51:00

இந்தோனேசியக் குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு கிறிஸ்தவ, முஸ்லீம் தலைவர்கள் கண்டனம்


ஜூலை18,2009. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இடம் பெற்றுள்ள இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களின் தலைவர்கள் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அத்தலைவர்கள் குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்று காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காகச் செபிக்கும் கத்தோலிக்கத் திருச்சபை, தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு சமயத் தலைவர்கள் தங்களது மதத்தினரைத் தூண்டுமாறு அழைப்புவிடுப்பதாக இந்தோனேசிய ஆயர் பேரவைச் செயலர் அருள்தந்தை யோஹான்னஸ் திவி ஹர்சாந்தோ கூறினார்.

இவ்வெள்ளி காலை எட்டு மணியளவில் ஜகார்த்தாவின் ரிட்ஸ் கார்ல்ட்டன், ஜே.வி.மாரியட் ஆகிய இரண்டு ஆடம்பர பயணியர் விடுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதுடன்அறுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது, தற்கொலைக் குண்டுதாரிகளாலேயே மேற்கொள்ளப்பட்டதாக இந்தோனேசிய காவல்துறை தனது சந்தேகத்தைத் தெரிவித்தது.

இந்தோனேசியாவின் சர்வதேச பிம்பத்தை சீர்குலைக்கும் விதத்தில் இடம் பெற்றுள்ள இந்தத் தாக்குதலை மனிதாபிமானமற்ற பயங்காரவாதத் தாக்குதல் என இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோ கண்டித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.