2009-07-15 15:13:19

திருத்தந்தை 2009ம் ஆண்டில் இதுவரை 22 புதன் பொது மறைபோதகங்கள் மறைபோதகங்கள் வழங்கியுள்ளார்


ஜூலை15,2009 உலக அளவில் ஊடகங்களில் அதிகமாகப் பேசப்படும் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதன் பொது மறைபோதகங்கள் இந்த 2009ம் ஆண்டில் இதுவரை 22 இடம் பெற்றுள்ளன, புனித பவுல் ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை அப்புனிதர் பற்றி இருபது மறைபோதகங்கள் வழங்கினார்

கடந்த பிப்ரவரி 4ம் தேதியோடு நிறைவு பெற்ற புனித பவுல் பற்றிய புதன் பொது மறைபோதகங்களுக்குப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியிலிருந்து மத்திய காலத்து கீழை மற்றும் மேலைத் திருச்சபையின் மாபெரும் எழுத்தாளர்கள் பற்றி மறைபோதகம் வழங்கி வருகிறார் திருத்தந்தை.

கடந்த பத்து மறைபோதகங்களில் சிரில், மெத்தோடியஸ், ஜான் ஸ்கோட்டோ எரியுஜெனா, ஜான் தமாசின், புனித பொனிபாஸ், ஜான் கிளிமாக்கோ போன்றவர்களின் சமய மற்றும் ஆன்மீக வளமைகள் பற்றிய தமது சிந்தனைகளை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

மேலும், புதன் பொது மறைபோதகங்களில் ஏப்ரல் முதல் தேதி திருத்தந்தை அவரது காமரூன் அங்கோலா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கானத் திருப்பயணம் பற்றியும், மே 20ம் தேதி அவரது புனித பூமிக்கானத் திருப்பயணம் பற்றியும் பேசினார். இன்னும், குருக்கள் ஆண்டு, புனித வாரத்தின் மூன்று முக்கிய நாட்கள், புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழா போன்ற தலைப்புக்களிலும் வழங்கியிருக்கிறார்.

2005ம் ஆண்டு மே 4 முதல் 2006 பிப்ரவரி 15 வரை காலை மற்றும் மாலை திருப்புகழ்மாலை திருப்பாடல்கள் பற்றியும், 2006ம் ஆண்டு மார்ச் 15 முதல் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 வரை திருச்சபை மற்றும் 12 திருத்தூதர்கள் மீதான இயேசுவின் திட்டம் பற்றியும், 2007ம் ஆண்டு மார்ச் 7 முதல் 2008 ஆம் ஆண்டு ஜூன் 25 வரை பன்னிரண்டு திருத்தூதர்களுக்குப் பின்னர் திருச்சபையில் முதல் மற்றும் இரண்டாவது தலைமுறைகள் பற்றியும், 2008ம் ஆண்டு ஜூலை 2 முதல் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 வரை புனித பவுல் பற்றியும் புதன் பொது மறைபோதகங்களை வழங்கியிருக்கிறார் அவர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்திங்களன்று வட இத்தாலிக்கு கோடை விடுமுறைக்குச் சென்றிருப்பதால் ஜூலை 15ம் தேதியான இப்புதனன்று அவரது வழக்கமான புதன் பொது மறைபோதகம் இடம் பெறவில்லை.

 








All the contents on this site are copyrighted ©.