2009-07-14 12:40:22

விவிலித் தேடல் நிகழ்ச்சி . 140709 .


இன்றைய விவிலியத் தேடல் நிகழ்ச்சியில் நாம் முன்மதியோடு செயல்பட்ட ஆனால் நாணயமற்ற ஒரு வீட்டுப் பொறுப்பாளர் பற்றிக் காண்போம் . இதனை நாம் தூய லூக்கா நற்செய்தியில் காண்கிறோம் . 16 , 1- 9 .

இந்தக் கதையின் தலைப்பு நாணயமற்ற கண்காணிப்பாளர் எனவும் அழைக்கப்படுகிறது .



நல்ல சமாரித்தன் கதை நமக்கு தன்னை மறந்து காயப்பட்ட ஒருவருக்கு உதவிய சமாரித்தனின் நல்ல எடுத்துக்காட்டை முன்வைக்கிறது . ஆனால் நாணயமற்ற கண்காணிப்பாளன் கதை சிக்கலில் மாட்டிக்கொண்ட நாணயமற்ற ஒருவர் எப்படி முன் மதியோடு சமாளிக்கிறார் எனக் காட்டுகிறது . அவருடைய முன் மதியை நாமும் பின்பற்ற அழைக்கப்படுகிறோம் . அவருடைய தீய குணத்தைத் தவிர்க்கவும் அழைக்கப்படுகிறோம் .

இக்கதை ஒரு தீயோனின் மூளை செயல்படும் விதத்தைக் காண்பித்து நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலும் இன்னும் சிறப்பாக முன்மதியோடு வாழவேண்டும் எனக் கற்பிக்கிறது .

இந்தக் கயவன் எப்படி அவனுடைய முதலாளியை ஏமாற்றினான் என நமக்குத் தெரியப்படுத்தவில்லை . ஆனால் பணி செய்வதற்குப் பதிலாக அவன் நேரத்தை உல்லாசமாகச் செலவிட்டிருக்கலாம் . தன் வாழ்வெனும் கூட்டை அவன் உல்லாசமாகக் கட்டியபோது திடீரென அந்த மின்னல் தாக்கியது . கணக்கை ஒப்புவித்துவிட்டு வேலையை விட்டு நீங்கிக் கொள் என மேலிட உத்தரவு வந்தது . அவன் வேலையைக் காலி செய்ததும் வாழ்வதற்கு வேண்டிய உத்திரவாதத்தை அமைத்துக் கொண்ட முன்மதியை அவனது தலைவர் மெச்சுகிறார் . ஆனால் அவனுடைய தலைவரோ இயேசுவோ அவனுடைய தவறான போக்கை மெச்சவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது . யாருக்கும் தவறு செய்வதற்கு அனுமதியில்லை . குற்றம் புரிந்தாலும் இயேசுவிடம் இரக்கமும் மன்னிப்பும் உண்டு .





இயேசு கதை வழியாக , உவமை வழியாக தன் கருத்தைத் தெளிவுறக் கூற முயன்றார் . அவர் கதைக்கு மிகவும் பொறுத்தமான மிக நல்ல நடத்தையுள்ள கதாபாத்திரத்தைத் தேர்ந்து கொள்ள நினைக்கவில்லை . வாழ்க்கையில் காணும் மனிதர்களைப் பிரதிபலித்துக் காட்டி கதையின் கருத்தை முன்வைத்தார் . கடவுள் ஒருவர் மட்டும்தானே எல்லாவற்றிலும் உன்னதமானவர் . வாழ்க்கையின் பல அம்சங்களையும் நேர்மையானவை , நீதிக்குப் புறம்பானவை என பல கோணங்களில் வாழ்க்கையின் ஓட்டத்தை, செயல்படும் முறைமையை இயேசு கதை வழி கருத்தை விளக்குவதற்கு எடுத்துக்காட்டுக்களைத் தேர்ந்து கொண்டார் . இயேசு என்ன கூற வருகிறார் . அந்தக் கயவன் தந்திரமாக செயல்படத் தெரிந்திருக்கிறான் . தம்முடைய சீடர்களுக்கு மந்திரமும் தெரியவில்லை , தந்திரமும் தெரியவில்லையே என இயேசு தம் எண்ணத்தை வெளியிடுகிறார் . அகஸ்தஸ் வில்லியம் என்பவர் கூறுகிறார் – முட்டாள்தனமாக வாழ்க்கையின் பாதையைத் தேர்ந்து கொண்டவன் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை ஓட்டுகிறான் . புத்திசாலித்தனமாக வாழ்க்கையைத் தேர்ந்து கொண்ட ஒருவர் மூளையைப் பயன்படுத்தாது வாழ்ந்து மடிகிறார் என்கிறார் .



அந்த அநீத கண்காணிப்பாளரின் தந்திரத்தைக் கவனியுங்கள் . சோதனை எதிர் வந்தபோது அதை அஞ்சாது எதிர் கொள்கிறான் . தன்னை அவன் நொந்து கொள்ளவில்லை . தன்மீது இரக்கப்பட்டு வேதனைப்படவில்லை . சுமைதாங்கியாக துன்பத்துக்கே துன்பம் கொடுக்கிறான் . வண்டியை இழுத்துச் செல்லும் எருதுகள் வழியில் தடையாக வரும் கற்களை தவிடுபொடியாக்குவதைப் போல தனக்கு வந்த தடைகளைத் தாண்டும் உத்தியைக் கையாள்கிறான் . நிலைமையைக் கணிக்கிறான் . இதனை இதன் வழியாக இப்படிச் செய்யவேண்டும் எனத் தீர்மானிக்கிறான் . கடலே சுனாமியாக மாறினாலும் அஞ்சாது எதிர்த்து நிற்கும் நெஞ்சுறுதி கொண்டிருக்கிறான் . நற்செய்தியின் வழிவந்த ஒளியின் மக்களுக்கு அவ்வளவு உத்தியிருக்கிறதா . கற்றதனால் ஆகும் பயன் என்ன – வரலாற்றைத் தெரிந்திருந்தும் வாழ்வாங்கு வாழக் கற்றார்களா – இந்த மண்ணுலகுக்காக வாழ்வதா . இன்றைய காலக்கண்ணாடியில் பார்த்தோம் – மாமன்னன் நெப்போலியன் சிறையிடப்பட்டு , தண்டிக்கப்பட்டு இறந்தான் . ஹிட்லர் தற்கொலை செய்து மாண்டான் . நாமும் அழிந்து போகும் புகழுக்காக மங்காத மறுவாழ்வை இழப்பதா . தவறான வழியில் நடப்பதா . நமக்கு நாமே மீட்புத் தரமுடியாது . கடவுள் அருள்துணை நமக்கு வேண்டும் . கடவுளைச் சாராதிருந்தால் நாம் அழிந்துபோக வேண்டியதுதான் . தனக்கு ஒப்பு உவமையே இல்லாத கடவுளின் தாள் சேர்ந்தால்தான் நாம் மனக்கவலையை மாற்றமுடியும் . நாம் கடவுளைப் பற்றிக்கொண்டு வாழ்கிறோமா – அவருக்காக வாழ்கிறோமா – அவர்காட்டும் வழியில் வாழ்கிறோமா .

நீதியற்ற கண்காணிப்பாளரின் ஆர்வத்தைக் கவனியுங்கள் . தம் உடல் வாழ்வுக்காக துரிதமாகச் செயல்படுகிறார் . தன் உணர்ச்சிகளுக்காக வாழும் அவனைப்போல நாம் நமது ஆன்மாவைக் காக்க வாழ்கிறோமா . கால்பந்தாட்டக்காரர் , வேக ஓட்டக்காரர் பயிற்சி செய்து தம்மை தகுதியுள்ளவராக்கிக் கொள்கிறார் . நாம் செபம் செய்ய நேரமில்லை எனச் சாக்குப்போக்குச் சொல்கிறோம் . தெருக்களில் சில பொருட்களை விற்பதற்காக கால்கடுக்க நிற்கும் நபர்களையும் , விளம்பரத்தில் தீவிரமாக இறங்கி தரமில்லாத பொருட்களை வாணிபம் செய்யும் உலகையும் நாம் காண்கிறோம் . நாம் கடவுளைப்பற்றி அவர் நமக்குப்புரியும் நன்மைகளைப்பற்றிப் பேசுகிறோமா . நாணயமற்ற கண்காணிப்பாளரின் முன்மதியைப் பாருங்கள் . தமக்கு இவ்வுலக எதிர்காலத்தைத் திட்டமிட்டு தவறான வழியில் அதை உறுதிசெய்து கொள்கிறார் . நாம் மறுவாழ்வுக்குச் சரியாகத் திட்டமிட்டுள்ளோமா . வாழ்வில் பலர் சேமிப்புக் கணக்கு , முதியோர் ஓய்வூதியம் , இன்சூரன்ஸ் எனும் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவை வழியாக இவ்வுலகில் சுகமாக வாழத் திட்டமிடுவதைக் காண்கிறோம் . மறைந்து நிற்கும் மறுவாழ்வுக்கு நாம் திட்டமிட்டுள்ளோமா . நான் உங்களுக்கு உறைவிடத்தை ஏற்பாடு செய்ய என் தந்தையின் வீட்டுக்குப் போகிறேன் என இயேசு தூய யோவான் நற்செய்தியில் கூறுகிறார் . அதிகாரம் 14,2 . ஆனால் இயேசுவை அன்பு செய்வதாகக் கூறும் பலர் இயேசு அளிக்கவுள்ள வரவேற்பைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுபோலத் தெரியவில்லை .



நாம் சரியாக ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் – இயேசு இந்தக் கதையில் உலகோதயச் சிந்தனையைப் பாராட்டவில்லை . இவ்வுலகுக்காக வாழும் மக்கள் மலைகளில் சிகரங்களில் மறைவின்றி எடுத்துக்காட்டாக வாழப்பிறந்தவர்கள் . ஆனால் கூண்டுக்குள் வாழ்கிறார்கள் . அவர்கள் காலத்தின் சூழ்நிலைக் கைதிகளாக வாழ்கிறார்கள் . மறுவாழ்வில் அக்கறை இல்லாதவர்களாக இந்த உலக வாழ்வின் பிடியில் சிக்கி நாளும் பொழுதும் பணத்தைப் பெருக்குவதே சிந்தனையாக உள்ளார்கள் . அவர்கள் வாழ்வில் கடவுள் இல்லாத இருள் மண்டிக்கிடக்கிறது . எப்பொழுதும் பசியோடு இருக்கிறார்கள் . சேர்த்துவைத்ததை திறந்து பார்த்தால் அங்கே உணவில்லை – தங்கம் இருக்கிறது – அது பசியைப் போக்குமா . தேடிய செல்வம் பயன்படாததாக இருக்கிறது . அவர்கள் உண்மையில் அறிவிலிகளே . இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக முன்மதியுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அர்த்தம் என்ன . அவர்கள் அழிவுப்பாதையில் செல்கிறார்கள் என்பதாகும் .



நாம் அனைவருமே வாழ்வுக்கு முடிவில் கணக்குக் கொடுக்கவேண்டும் . ஒவ்வொருநாளுமே நாம் கணக்குக் கொடுக்கவேண்டும் . நாட்காட்டி நம் வாழ்நாட்களின் ஒரு பகுதியை நாளும் அறுத்துக்கொண்டே வருகிறது . இரவு எனும் திரை வீழும்போது நாள் ஒன்று முடிந்துவிட்டது என நமக்குத் தெரியும் . வாழ்வில் துயரமோ மகிழ்ச்சியோ , போரோ அமைதியோ நம்மைக் கணக்குக் கேட்கத் தவறுவதில்லை . சாவு என்பது தீர்வை நாளாகும் . சாவு வருமுன்னர் நாம் அன்றாட வாழ்வில் வரவிருக்கும் பேரின்ப வாழ்வுக்காக தயாராக வேண்டும் .



நம்முடைய ஒவ்வொரு செயலுமே நம்மை மறுவாழ்வுக்கு இட்டுச் செல்லும் ஏணிப்படியாகும் . இவ்வுலகச் செல்வங்களை நாம் அனுபவிப்பதும் நாம் கண்காளிப்பாளர்கள் என்ற ரீதியில்தான் நமக்குத் தரப்பட்டுள்ளது . கடவுளோடு தொடர்புள்ளவை நம்முடைய செயல்பாடுகள் – கடவுளிடமிருந்து வந்த நம்மை அவை கடவுளிடமே கூட்டிச் செல்கின்றன .








All the contents on this site are copyrighted ©.