2009-07-13 15:52:01

மனிதம் இன்னும் சாகவில்லை


ஜூலை13,2009. மனிதனின் உண்மையான மாண்பை மதிக்காத எந்தச் செயலும், அது அன்பினால் செய்யப்பட்டிருந்தாலும்கூட, உண்மையில், அது மனித வாழ்வின் பொருளிய மற்றும் இயந்திரத்தனமான கருத்துருவாக்கத்தின் விளைவே, இது, சுயவிருப்பத்தை நிறைவேற்றுகின்ற காலியான சிப்பியாகத்தான் இருக்கும். இது, முழு மனித வளர்ச்சியில் எதிரான பலன்களை வருவிக்கக்கூடும். மனித வாழ்வுக்கு எதிரான சில நடைமுறைகளில் தெளிவாக வெளிப்படுகின்ற தொழிற்நுட்பத்தின் தங்குதடையற்ற ஆளுமை, மனித சமுதாயத்தின் எதிர்காலத்தில் இருண்ட தோற்றங்களை ஏற்படுத்தக் கூடும். முதிர்ந்த மனிதக் கருக்கள் மீதான பரிசோதனை, கருக்கலைப்பு, காருண்யக் கொலை, கருவளக்கேடு, குடும்பக்கட்டுப்பாடு போன்றவை, மனித முன்னேற்றத்திற்குத் தேவை என்ற சாக்குப்போக்காக அவை தொழிற்நுட்ப வளர்ச்சியில் செய்யப்படுகின்றன. இன்றைய சமூகப் பிரச்சனை, மனிதஇனம் சார்ந்த பிரச்சனையாக 'தீவிரமாக மாறி வருகிறது, தற்போதைய மனித சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொழிற்நுட்ப ரீதியானது மட்டுமல்ல, ஆனால் அவை ஆன்மாவையும் இதயத்தையும் கொண்ட மனிதனின் அனைத்துத் தேவைகளையும் கவனத்தில் கொண்டதாய் அமைய வேண்டும்". மனிதனை மையப்படுத்தாத, அதேசமயம் தொழிற்நுட்ப வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்ட முன்னேற்றத்திற்கு எதிரான தமது கருத்துக்களை இவ்வாறு வெளியிட்டுள்ளார் RealAudioMP3 திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இம்மாதம் ஏழாம் தேதி வெளியிடப்பட்ட "காரித்தாஸ் இன் வெரித்தாத்தே" அதாவது, “உண்மையில் பிறரன்பு” என்ற திருத்தந்தையின் மூன்றாவது திருமடலில் இவ்வாறு அவர் பல கருத்துக்களைச் சொல்லியுள்ளார். மனிதன் படைப்பின் சிகரம், அவன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவன், இவ்வுலகில் எடுக்கப்படும் அனைத்து வகையான முன்னேற்ற முயற்சிகளும் மனிதனை மையம் கொண்டதாய், அவனின் உண்மையான மாண்பை மதிப்பதாய், அவனுக்கு இருக்கும் அடிப்படையான உரிமைகளை மதிப்பதாய் இருக்க வேண்டும். இதைத்தான் திருத்தந்தையரும் திருச்சபை அதிகாரிகளும் உலகத் தலைவர்களிடம் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று இத்தாலியில் நடந்து முடிந்த ஜி-8 உலகின் பணக்கார நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கும் இதே வேண்டுகோளைத்தான் கிறிஸ்தவத் தலைவர்கள் முன்வைத்தனர். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்றெல்லாம் பேச்சுக்கள் பற்றிச் சொல்லுகின்றனர். ஆனால் பேசும் போது, பிறருடைய கோபத்தைக் கிளராமல் நீக்குப் போக்குத் தெரிந்து பேச வேண்டும் என்பார்கள். திருச்சபை அதிகாரிகளின் பேச்சுகள் எப்பொழுதும் அப்படித்தான் இருக்கின்றன. எனவேதான் அவற்றை உலகத் தலைவர்கள் உற்றுக் கேட்கிறார்கள். கடந்த வெள்ளியன்று, வத்திக்கானில் இடம் பெற்ற சந்திப்பின் போது, திருத்தந்தை கூறியதை அமெரிக்க அதிபர் ஒபாமா உற்றுக் கேட்டார் என்று திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.

மனிதன் எந்த ஒரு நிலையில் இருந்தாலும் அவன் எதிர்பார்ப்பதெல்லாம் தனது மனிதமும் மாண்பும் மதிக்கப்பட வேண்டுமென்பதே. துர்கநேவ் என்பவர் பிரபல நாவல் ஆசிரியர். இவரது நூல்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதன்மூலம் பெயரும் புகழும் பணமும் நிறையக் கிடைத்தன. ஒருசமயம் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அச்சமயம் பலர் அவரது எழுத்துக்ளையும் திறமையையும் புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவர் கூறினாராம்-“எனது அறிவு, சாதுர்யம், எனக்குக் கிடைத்துள்ள செல்வம், செல்வாக்கு இவை எல்லாவற்றையும்விட என்னை ஒரு மனிதனாக மதித்து நான் ஏன் சாப்பிடுவதற்குத் தாமதமாக வந்தேன் என்று உண்மையிலேயே வருந்தும் இதயத்தைக் கொண்ட ஒரு பெண் தனக்கு மனைவியாக அமைய வேண்டும். அப்படி அமைந்துவிட்டால் எனது சொத்துக்கள் அனைத்தையும் தருவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று.

ஆனால், கடந்த மாதம் முப்பதாம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் தனது உயிர்த்தோழியின் உயிரையே நகைக்காகக் கொலை செய்திருக்கிறார் சர்மிளா பேகம் என்ற பெண். கொலை செய்யப்பட்ட வனிதா வாய் பேச இயலாதவள். இந்தக் கொலைச் செயலை அவள் எப்படி விவரிக்கிறாள் எனில், ''பிணத்தை சுலபமாக எடுத்துட்டுப் போகலாமேன்னு கால் ரெண்டையும் அருவாளால வெட்டினேன். அப்போ அருவாள் உடைஞ்சுபோனதால, அருவாமனையை எடுத்துட்டு வந்து மட்டனை அறுக்குற மாதிரி நறுக்கி எடுத்துட்டேன். எப்படியாச்சும் தப்பிச்சுக்கலாம்னு நினைச்சேன்...முடியாமப் போச்சு!''

அன்பர்களே, தான் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனிதனே பிறனை மாண்புடன் நடத்துவதில்லை. பிறனின் மாண்பை மதிப்பதில்லை. தங்கம், பணம், பதவி என்கிற போது நட்பும் இரத்த உறவுகளும், கண்களை மறைத்து இதயத்தைக் கல்லாக்கி விடுகின்றன. இலங்கை அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் திறந்த வெளிச்சிறைகளில் வாழ்வது போல் வாழ்கிறார்கள் என்று அந்நாட்டு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி, அதிபர் இராஷபக்ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதம் காக்கப்பட வேண்டுமென்றுதான் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், ''உண்மையில் பிறரன்பு என்ற தமது புதிய சுற்று மடலில், நவீன உயிரியல்தொழிற்நுட்பத்தின் வழியாக மனிதன், மனிதனின் கரங்களிலே வைக்கப்படுவது அதிகரித்து வருகின்றது RealAudioMP3 '' என்று சொல்லியுள்ளார்.

இத்தகையப் பெருந்தலைவர்களின் மனிதத்திற்கான அழைப்புக்கு ஆங்காங்கே செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது. தனுஷ்கோடி கடலில் ஆறு நாட்களாகத் தத்தளித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர், இந்தியாவின் இந்த மனிதாபிமானம் இலங்கைகக்கு வருமா? என்று தூத்துக்குடி மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேசமயம் இருபத்தியொன்று 21 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் ஜூலை 13ம் தேதி தினத்தாளில் வெளியான செய்திகள். அன்பர்களே! மனிதம் இன்னும் செத்துவிடவில்லை. இந்தியாவில் 2006ம் ஆண்டு அக்டோபரில் நடந்த நிகழ்வு ஒன்றைச் சொல்லுகிறோம்.

அன்று அதிகாலை ஒரு மணி. சென்னை மணப்பாக்கம் பகுதியிலுள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் சென்னை நகர கூடுதல் கமிஷனரான சங்கர்ராம் ஜாங்கிட்டின். அவரருகே இருந்த கைத்தொலைபேசி அந்த நேரத்தில் அடித்தவுடன் தூக்கக் கலக்கத்தில் எடுத்துப் பேசினால் அடுத்த முனையில் அவரது பாசமிகு அண்ணன் தாராராம் ஜாங்கிட்டின். “தம்பி, காட்டாற்று வெள்ளத்துல சிக்கிக்கிட்டேன். கையில் அகப்பட்ட மரக்கிளையைப் பிடிச்சுத் தொங்கிக் கொண்டிருக்கேன். வெள்ளத்தை மரம் தாக்குப் பிடிக்கிற வரைக்கும்தான் நான் உயிரோட இருப்பேன்” என்று சொன்னதோடு பேச்சு நின்று விட்டது. சங்கர்ராம் பதறிப் போய் இராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டத்திலுள்ள அவரது அண்ணனின் வீட்டுக்குத் தொலை பேசி எடுத்த போது அவரது அண்ணி பேசியிருக்கிறார். அங்கு பெய்த கனத்த மழையில் வெள்ளம் தாழ்வான பகுதி கிராமங்களில் நுழைந்து விட்டது. குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் எல்லாரும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். விடயம் அறிந்து உங்கள் அண்ணன் அங்கு ஓடிப் போய் இருபது, இருபத்தைந்து குடும்பங்களை நம்ம வீட்டுக்கு கூட்டி வந்துள்ளார். கிட்டதட்ட நூறு பேருக்கு மேல இருக்காங்க. நான் அவங்களுக்குச் சாப்பாடு தயார் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறையப் பேர் வெள்ள ஆபத்து வந்ததுகூடத் தெரியாம மாட்டிக்கிட்டு இருக்காங்க என்று இங்கு வந்தவங்க சொல்லி அழுததால் நம்ம ஜீப்பை எடுத்துக்கிட்டு உங்க அண்ணன் போயிருக்கிறார் என்றார். சங்கர்ராம் தனது குடும்பத்தினருடன் அவசரம் அவசரமாக விமானம் மூலம் பார்மர் மாவட்டத்திலுள்ள அண்ணன் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காடாக இருந்ததால் படகு மூலம் வீட்டை அடைந்திருக்கிறார்கள். அங்கே கிராமவாசிகள் வீட்டுத் திண்ணையில் கண்ணீருடன் குழுமியிருக்க, வீட்டினுள் அண்ணனின் படத்திற்கு மாலை போடப்பட்டிருந்ததாம்.

என்ன நடந்திருக்கிறது என்றால், ஜீப்பில் பலமுறை பயணம் செய்து வெள்ளத்தில் அகப்பட்ட சுமார் 105 பேரைக் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் அவர்களைச் சேர்த்த பின்னர் மீண்டும் சென்ற அவரது அண்ணனைத் தீடிரென வந்த காட்டாற்று வெள்ளத்தால் தண்ணீர் ஜீப்பில் புகுந்து மூன்று முறை அதனை உருட்டியிருக்கிறது. வாகன ஓட்டுனரும் அவரது அணணனும் நீரில் தத்தளித்து இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் ஓட்டுனரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. அப்போது அந்த இடத்திலிருந்த மரக்கிளையைப் பிடித்துக் கொண்டுதான் அவரது அண்ணன் கைத்தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர் கடைசியாக மீட்புப் படையினரிடம், “என்னை மீட்க யாரையும் அனுப்ப வேண்டாம். தண்ணனீர்மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. கிராம மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருக்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள். இன்னும் நிறையக் குடும்பங்கள் தாழ்வான பகுதியில் தத்தளிக்கின்றன. காலையில் அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யுங்கள். ஏற்கனவே இங்குள்ள கிராம மக்களுக்கு நலத்திட்டப் பணிகளைச் செய்து வந்தேன். இப்போது பாதியிலே விட்டுச் செல்கிறேன். நீங்கள்தான் முழுமையாகச் செய்து கொடுக்க வேண்டும். என்னைக் காப்பாற்ற முயற்சித்து யாரும் பாதியிலே தங்கள் உயிரை விட்டுவிட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இத்தகைய மனித நேயம் கொண்டவர்களின் மனிதாபிமானத்தில் சிறிதளவாவது நம்மில் ஒளிர வேண்டாமா? அன்பர்களே, மனிதனுக்குள்ள குறையாக, “பிறர் சொல்வதை நாம் கவனமாக கேட்பதில்லை; பிறர் சொல்வதன் முழு அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்வதில்லை; தவறு ஏற்படும்போது நாம் அதை உடனே ஏற்றுக் கொள்வதில்லை” என்று சொல்கிறார்கள். எனவே பெரியோர் சொல்லும், “மனிதன் தன்னையே பார்க்க ஆரம்பிக்கிற போது அவனில் வேகம் குறைகின்றது, ஆனால் விவேகம் பிறக்கின்றது”என்பதனை சிந்திப்போம். மனித நேயம் நம்மில் துளிர்விடட்டும். அதனைச் சாகாமல் காப்போம்








All the contents on this site are copyrighted ©.