2009-07-13 10:57:47

திருமடல் 'உண்மையில் பிறரன்பு' Caritas in Veritate

(தொகுப்பு)


'இயேசு தமது இவ்வுலக வாழ்வில் சான்று பகர்ந்த, உண்மையில் பிறரன்பு', 'ஒவ்வொரு மனிதன் மற்றும் முழு மனித சமுதாயத்தின் உண்மையான முன்னேற்றத்திற்கு முதன்மையான உந்து சக்தியாக இருக்கின்றது' : இவ்வாறு, உலகக் கத்தோலிக்கருக்கும் நன்மனம் படைத்த எல்லாருக்குமென வழங்கப்பட்டுள்ள உண்மையில் பிறரன்பு என்ற திருமடல் தொடங்குகின்றது. 'பிறரன்பு திருச்சபையின் சமூகக் கோட்பாட்டின் மையமாக இருக்கின்றது' என்பதை இத்திருமடலின் முன்னுரைப் பகுதியில் திருத்தந்தை நினைவு கூருகின்றார். அதேசமயம், இது, நன்னெறி வாழ்விலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட, தவறாகப் புரிந்து கொள்ளப்படும் ஆபத்தைக் கண்முன் கொண்டு உண்மையோடு ஒன்றிணைந்து செல்வதாக இருக்க வேண்டும். உண்மை இல்லாத ஒரு கிறிஸ்தவம் நல்ல உணர்வுகளின் தொகுப்புக்கு மாற்றாக இருக்கக்கூடும், சமூக ஒன்றிணைந்த வாழ்வுக்கு உதவியாக இருக்கக் கூடும், ஆனால் சிறிதளவே நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கும் (§1-4).

முன்னேற்றத்திற்கு உண்மை தேவைப்படுகின்றது. இதுவன்றி, 'சமூக நடவடிக்கை, தனிப்பட்ட ஆதாயங்களுக்கும் அதிகாரத்தின் வாதப்போக்குக்கும் தொண்டு செய்வதில் கொண்டு போய் நிறுத்தும். அதன் விளைவாக சமுதாயம் கூறுபடும்' என்று திருத்தந்தை உறுதிபடச் சொல்கிறார்(5). 'உண்மையில் பிறரன்பு' என்ற கோட்பாட்டிலிருந்து எழுகின்ற நன்னெறிச் செயல்பாட்டை நோக்கி வழிகாட்டும் இரண்டு கூறுகளைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சுட்டிக் காட்டுகின்றார். அவையாவன : நீதி மற்றும் பொது நலன். திருச்சபையிடம் தொழிட்நுட்ப ரீதியாகத் தீர்வுகள் கிடையாது. ஆயினும், மனிதனுக்கேற்ற, அவனின் மாண்பிற்கு, அவனது அழைப்பிற்கு ஏற்ற ஒரு சமுதாயத்தை அமைப்பதற்குத் திருச்சபை ஓர் 'உண்மையின் பணியைக் கொண்டுள்ளது'(§8-9).



இத்திருமடலின் முதல் அதிகாரம், திருத்தந்தை ஆறாம் பவுலின் 'மக்களின் முன்னேற்றம்' (Populorum Progressio) என்ற திருமடலின் செய்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில், நித்திய வாழ்வு பற்றிய கண்ணோட்டம் இல்லாத மனித முன்னேற்றம் என்பது, உயிர்மூச்சற்றதாகவே இருக்கும் என்று திருத்தந்தை எச்சரிக்கிறார். கடவுளின்றி, முன்னேற்றம் என்பது எதிர்மறையானதாக, மனிதமற்றதாக இருக்கும்(§10-12).

முன்னேற்றம் என்பது ஓர் அழைப்பாகும். இது எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலையிலிருந்து வரும் அழைப்பாகும். ஒவ்வொரு மனிதனின் மற்றும் அனைத்து மனிதரின் முன்னேற்றத்தை நோக்கும் போது இது முற்றிலும் உண்மையாகிறது. வளர்ச்சி குன்றியிருப்பதற்கான காரணங்களுள் முதன்மையானது என்னவெனில்: விருப்பத்தில், எண்ணத்தில், இன்னும் அதிகமாக, தனிமனிதரிலும், மக்கள் மத்தியிலும் சகோதரத்துவம் இல்லாமையே ஆகும். எனவே பொருளாதார நடைமுறைகள், முழுமனிதனுக்குப் பயன் அளிக்கக்கூடியதாய் அமைவதற்கு ஆவன செய்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.(§19-20).



இரண்டாவது அதிகாரத்தில், திருத்தந்தை, நம் காலத்தில் மனித முன்னேற்றம் பற்றி விளக்கியுள்ளார்.

உலகின் செல்வம், வரம்பற்று வளர்ந்து வருகிறது. எனினும் வறுமையின் புதிய வடிவங்கள் உதிப்பதோடு சமத்துவமின்மைகளும் அதிகரித்து வருகின்றன. பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் ஊழல் இருக்கின்றது, பல நேரங்களில் பன்னாட்டு தொழில் அமைப்புகள் தொழிலாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை என்று அவர் கவலைப்படுகிறார். அதோடு, நன்கொடை வழங்குபவர்கள் மற்றும் உதவிகளைப் பெறுகிறவர்களின் பொறுப்பற்ற செயல்களால் சர்வதேச உதவிகள், அடிக்கடி அவைப் போய்ச் சேரவேண்டிய இடங்களிலிருந்து திசை திருப்பப்படுகின்றன. அதேசமயம், பணக்கார நாடுகளில் அறிவுச் சொத்துரிமையை, குறிப்பாக நலவாழ்வுத் துறையில், முறையற்று வலுவாய் வலியுறுத்துவதன் மூலம் பகிராநிலை உருவாக்கப்படுகிறது.

வாழ்வை மதித்தல், மக்களின் வளர்ச்சியிலிருந்து எந்த விதத்திலும் பிரிக்கப்படக் கூடாது என்பதையும் திருத்தந்தை கோடிட்டுக் காட்டுகிறார். உலகின் பல்வேறு பகுதிகள், கருக்கலைப்பை புகுத்தும் அளவுக்கு மக்கள்தொகை கட்டுப்பாடு நடைமுறைகளை இன்னும் அனுபவிக்கின்றன. பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில், குழந்தை பிறப்புக்கு எதிரான மனநிலை காணப்படுகின்றது. இம்மனநிலை ஏதோ ஒரு கலாச்சார முன்னேற்ற வடிவம் என்பது போல, இதனைப் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் அடிக்கடி இடம் பெறுகின்றன. காருண்யக் கொலையை அங்கீகரிக்கும் சட்டங்கள் கவலைப்படுவதற்கான மற்றுமொரு விடயமாக இருக்கின்றது. வாழ்வை மறுத்தல் அல்லது மட்டுப்படுத்துதல் நோக்கி ஒரு சமுதாயம் செல்லும் போது மனிதனின் உண்மையான நலனுக்குத் தேவையான நோக்கமும் சக்தியும் அதற்குக் கிடைக்காமல் போய்விடும். சமய சுதந்திரத்திற்கான உரிமை வளர்ச்சியோடு தொடர்புடைய மற்றுமொரு கூறாகும்.



சகோதரத்துவம், பொருளாதார வளர்ச்சி, நாகரீக சமுதாயம் ஆகியவை இந்தத் திருமடலின் மூன்றாவது அதிகாரத்தின் மையக் கருத்துக்களாகும். ஒழுக்கநெறிப் பண்பின் தாக்கங்களிலிருந்து விடுபட்ட பொருளாதாரங்கள் மனிதனைப் பொருளாதார நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கென முழுவதும் அழிவுக்குரிய பாதையில் இட்டுச் செல்லும். வளர்ச்சி, உண்மையிலயே மனிதமிக்கதாக இருக்க வேண்டுமெனில் அது கைம்மாறு கருதாத கோட்பாட்டிற்கு இடமளிக்க வேண்டும்.

ஒருமைப்பாடு மற்றும் ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையின் உள்வடிவங்களின்றி பொருளாதாரச் சந்தையால் அதன் சரியானப் பொருளாதாரச் செயல்பாட்டை முழுமையாக நிறைவேற்ற முடியாது. சந்தை தன்னையே சார்ந்து இருக்க முடியாது. அது தனது நன்னெறி சக்திகளை பிற பொருட்களிடமிருந்து எடுக்க வேண்டும். ஏழைகள் சுமையாக அல்ல, மாறாக வளமாக கருதப்பட வேண்டும். வலுவானவர்கள் வலுவற்றவர்களை மட்டுப்படுத்தும் இடமாக சந்தை மாறக்கூடாது. வணிகத் தத்துவங்கள் பொதுநலன் மீது நாட்டம் கொள்வதை நோக்கி வழிநடத்தப்பட வேண்டியது அவசியம். இதற்கு குறிப்பாக அரசியல் குழு பொறுப்பு எடுக்க வேண்டும். சந்தை தன்னிலே எதிர்மறையானது அல்ல. எனவே மனிதன், அவனது நன்னெறி மனசாட்சி மற்றும் பொறுப்புணர்வுக்குச் சவால் விடுக்க வேண்டும். ஒளிவுமறைவில்லாமை, நேர்மை, பொறுப்பு போன்ற பாரம்பரிய சமூக நன்னெறிக் கோட்பாடுகள் புறக்கணிக்கப்படக் கூடாது அல்லது தளர்த்தப்படக் கூடாது என்பதை தற்போதைய பொருளாதார நெருக்கடி காட்டுகின்றது. அதேசமயம், பொருளாதாரங்கள் நாட்டின் கடமையை நீக்கவில்லை ஆனால் அவற்றுக்கு நீதியான சட்டங்கள் தேவை என்பதை திருத்தந்தை நமக்கு நினைவுபடுத்துகிறார்.



மக்களின் முன்னேற்றம், உரிமைகள், கடமைகள், சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகள் நான்காவது அதிகாரத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. சில வளர்ச்சி குன்றிய நாடுகளில் உணவும் தண்ணீரும் குறைவுபடும் போது, செல்வமிக்க சமுதாயங்களில் 'மிகுதியாக கொண்டிருப்பதற்கான உரிமை கேட்கப்படுவதை' எவரும் கவனித்திருக்க முடியும். 'தனிப்பட்டவரின் உரிமைகளானவை, கடமைகள் என்ற அமைப்பிலிருந்து விலகிக்கொள்ளும் போது, அவை கட்டுப்பாடற்றுப் போகின்றன'. உரிமைகளும், கடமைகளும் நன்னெறிச் சூழலோடு தொடர்பு கொண்டவை. அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் 'உரிமைகளின் நோக்கு மற்றும் மீறத்தகாதத் தன்மையை' மறக்கக் கூடாது(§43). வளர்ச்சி குறைவுபடுவதற்கு முதன்மையான காரணமாக மக்கள்தொகை பெருக்கத்தை நோக்குவது தவறாகும். பாலியல் நடவடிக்கையை, 'வெறும் சிற்றின்பம் அல்லது பொழுது போக்கோடு மட்டும்' நிறுத்திவிடக் கூடாது என்று திருத்தந்தை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறார். 'பொருளாதாரம் சரியாகச் செயல்படுவதற்கு ஒழுக்கநெறிகள் தேவைப்படுகின்றன. இந்த ஒழுக்கநெறிகள் எவையானாலும் என்பது அல்ல, ஆனால் அவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் சொல்கிறார்'.

இந்த அதிகாரத்தின் இறுதி பத்தி சுற்றுச் சூழலுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு விசுவாசிக்கு, இயற்கை, கடவுளின் கொடை. அது பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும். உண்மையில், 'புதுப்பிக்கப்பட முடியாத சக்தி வளங்களைத் தேக்கி வைத்திருக்கும்' சில நாடுகளும் வல்லமை படைத்த குழுக்களும் 'ஏழை நாடுகளின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக' இருக்கின்றன. ஆதலால், 'புதுப்பிக்கப்பட முடியாத வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட முடியாதபடி அவைகளை ஒழுங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிர்வாக ரீதியான வழிகளை' சர்வதேச சமுதாயம் கண்டுபிடிக்க வேண்டும். 'தொழிற்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ள சமூதாயங்கள், தங்களின் உள்ளூர் சக்தி நுகர்வை குறைக்க வேண்டும், குறைக்க முடியும். அதேசமயம், 'அதற்கு மாற்றான சக்தி குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்'. அடிப்படையில், 'புதிய வாழ்க்கைமுறையை ஏற்றுக் கொள்வதற்கு இட்டுச் செல்லக்கூடிய மனநிலையில் உறுதியான மாற்றம் தேவைப்படுகின்றது'.



மனிதக் குடும்பத்தின் ஒத்துழைப்பு ஐந்தாவது அதிகாரத்தின் மையமாக இருக்கின்றது. 'மக்களின் முன்னேற்றம் என்பது, எல்லாவற்றுக்கும் மேலாக மனித இனம் ஒரே குடும்பம் என்பதை அங்கீகரிப்பதைச் சார்ந்துள்ளது' என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அதில் காட்டுகிறார். அதே சமயம், 'பொது வாழ்வின் நீரோட்டத்தில் கடவுளுக்கு இடமிருக்கிறது' என்றால் மட்டுமே கிறிஸ்தவ மதம் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை ஒருவர் அதில் வாசிக்கலாம். 'ஒருவர் பொதுப்படையாகத் தனது மதத்தை அறிவிப்பதற்கான உரிமையை மறுப்பதன் மூலம்', அரசியல் 'ஆணவ அதிகாரம் மற்றும் வலிய வம்புக்குச் செல்லும் பண்பை' எடுத்துக் கொள்கிறது. பகுத்தறிவுக்கும் சமய நம்பிக்கைக்கும் இடையேயான 'பலனுள்ள உரையாடலுக்கான வாய்ப்பை மதச்சார்பின்மை கோட்பாடும், அடிப்படைவாதமும்' விலக்குகின்றன என்று திருத்தந்தை எச்சரிக்கிறார்.

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் தங்களின் உற்பத்தியின் 'பெரும் பகுதியை வளர்ச்சிக்கான உதவிக்கு ஒதுக்குமாறும்' அதன்மூலம் அவைகள் எடுத்துள்ள கடமைகளை மதிப்பதாக இருக்கும் என்றும் அந்நாடுகளை திருத்தந்தை கேட்கிறார். சார்பியலான நிலை ஒவ்வொருவரையும் ஏழையாக்குவதால் கல்விக்கும் 'மனிதனின் ஒருங்கிணைந்த உருவாக்கலுக்கும்' அதிக வாய்ப்பு வழங்கப்படுமாறும் அவர் ஆலோசனை சொல்கிறார். வரம்புமீறிய பாலியல் சுற்றுலா கூறு ஓர் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 'இந்த நடவடிக்கை, உள்ளூர் அரசுகளின் ஆதரவுடன், சுற்றுலா மேற்கொள்ளப்படும் நாடுகளின் மௌனத்துடன், சுற்றுலாக்களை நடத்தும் பலரின் உடந்தையுடன் இடம் பெறுவதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது'(§59-61).

குடியேற்றத்தின் கூறு பற்றியும் திருத்தந்தை கருத்துச் சொல்லியிருக்கிறார். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வாணிகச்சரக்காக நோக்கப்படக் கடாது என்று விண்ணப்பிக்கும் திருத்தந்தை, 'ஏழ்மைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் இடையே இருக்கும் நேரிடைத் தொடர்பையும்' காட்டுகிறார்.

இந்த அதிகாரத்தின் இறுதி பத்தி, ஐக்கிய நாடுகள் நிறுவனமும் பொருளாதார நிறுவனங்களும் சர்வதேச நிதி அமைப்பும் சீரமைக்கப்பட வேண்டியதற்கான அவசியம் மிகவும் வலுவாக உணரப்படுவது பற்றி விளக்குகிறது.



ஆறாவது மற்றும் கடைசி அதிகாரம், மக்கள் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது. 'மனித சமுதாயம், தொழிற்நுட்ப விந்தைகள் மூலமாக தன்னையே மீண்டும் படைக்க முடியும்' என்பதை நம்ப வைக்கும் தவறானப் போக்குகளுக்கு எதிராக திருத்தந்தை நம்மை எச்சரித்துள்ளார்.

'தொழிற்நுட்பத்தின் உச்ச உயர்நிலைக்கும் மனித நன்னெறி பொறுப்புக்கும் இடையேயான இன்றைய கலாச்சாரப் போராட்டத்தில்' குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிக்கலான போர்க்களமாக உயிரியல் நன்னெறித் துறை இருக்கின்றது. முதிர்ந்த கரு மீதான சோதனை, உயிரினங்களை ஒரே மாதிரியாக உருவாக்கும் குளோனிங் பற்றிய ஆராய்ச்சி ஆகியவை 'ஒவ்வொரு மறைபொருளையும் தேர்ச்சி அடையச் செய்கின்றது' என்று நம்பி அவை 'இன்றைய கலாச்சாரத்தால் ஊக்குவிக்கப்படுகின்றன'.; திட்டமிட்டு வடிவமைக்கப்படும் இனஆக்கம் பற்றிய பயத்தையும் திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ளார்(§74-75)'. முன்னேற்றம், வெறும் பொருளிய வளர்ச்சியை மட்டுமல்லாமல் ஆன்மீக வளர்ச்சியை உள்ளடக்க வேண்டும் என அவர் கேட்கிறார். 'மனித நிகழ்வுகளின் உலகாயுதக் கண்ணோட்டத்திற்கும் மேலாக' உயரும் பொருட்டு 'புதிய இதயத்தை' நாம் கொண்டிருக்குமாறும் விண்ணப்பித்து அவர் முடிக்கிறார்(§76-77).

திருத்தந்தை தனது முடிவுரையில், 'கிறிஸ்தவர்கள் இறைவேண்டலில் தங்கள் கைகளை கடவுளை நோக்கி உயர்த்த வேண்டியது' வளர்ச்சிக்குத் தேவை, மற்றும் 'அன்பும் மன்னிப்பும் பிறரை ஏற்றுக் கொள்ளுதலும், நீதியும் அமைதியும்' அதற்கு அவசியம் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்(§78-79).








All the contents on this site are copyrighted ©.