2009-07-13 16:03:31

திருச்சபை மனிதாபிமானப் பண்பில் மிகச் சிறந்த வல்லுனர்


ஜூலை13,2009 திருச்சபையிடம், இன்றைய உலகைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாத் தொழிற்நுட்ப ரீதியானத் தீர்வுகள் இல்லையென்றாலும் அது மனிதப்பண்பில் மிகச் சிறந்த வல்லுனர் மற்றும் உண்மை, நீதி அன்பு ஆகிய போதனைகளை அனைத்து மக்களுக்கும் வழங்குகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்குத் தமது காரித்தாஸ் இன் வெரித்தாத்தே என்ற புதிய திருமடல் பற்றி விளக்கிய திருத்தந்தை, இத்தாலியின் லாக்குய்லாவில் ஜி-8 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது பற்றியும் குறிப்பிட்டார்.

இந்த உச்சி மாநாட்டில் இடம் பெற்ற சில தலைப்புகள் உடனடியாகத் தேவைப்படுவன என்றுரைத்த திருத்தந்தை, உலகில் காணப்படும் சமூக சமத்துவமின்மைகளும் அநீத அமைப்புகளும் இனியும் சகித்துக் கொள்ளப்பட முடியாதவை என்றும் கூறினார்.

இவைகளைக் களைவதற்குச் சரியான மற்றும் உடனடித் தலையீடுகள் தேவை என்பது மட்டுமன்றி, நிலைத்த பொதுவான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கு ஒருங்கிணைந்த யுக்திகளும் அவசியம் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

மானுடத்திற்கான நல்லதோர் எதிர்காலத்திற்கு உறுதி வழங்கும் நோக்கத்துடன் பொதுவான உடன்பாடுகளுக்கு வரவேண்டியதன் அவசியத்தையும், ஜி-8 நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் வலியுறுத்தினர் என்றும் அவர் கூறினார்.

தமது புதிய அப்போஸ்தலிக்கச் சுற்றுமடல் வலியுறுத்தும் சில முக்கிய கூறுகள் பற்றியும் ஞாயிறு மூவேளை செப உரையில் விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

தற்போதைய உலகின் குழப்பமான சூழலுக்கு மத்தியில், திருச்சபை நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்குகின்றது என்றும், கிறிஸ்துவை அறிவிப்பது வளர்ச்சிக்கூறின் முதலும் முக்கியமுமான செயலாகும் என்பதை அது கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்துவதாகவும் கூறினார் பாப்பிறை.

அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கானடா, இரஷ்யா ஆகிய ஜி-8 நாடுகளின் தலைவர்களின் இந்த உச்சி மாநாட்டில், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ உட்பட சில வளரும் நாடுகளும் பங்கு கொள்ள அழைக்கப்பட்டிருந்தன.

 








All the contents on this site are copyrighted ©.