2009-07-11 15:37:21

பல்கலைகழக மாணவர்கள் ஒருங்கிணைந்த ஆளுமையை வளர்க்கவும் பொது நலனுக்குத் தங்களின் பங்கீட்டை வழங்கவும் முன்வருமாறு திருத்தந்தை அழைப்பு


ஜூலை11,2009 பல்கலைகழக மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் அவர்களின் மேலான அறிவு வளங்களைப் பெருக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த ஆளுமையை வளர்க்கவும் பொது நலனுக்குத் தங்களின் பங்கீட்டை வழங்கவும் முன்வருமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் மறைக்கல்வி-பள்ளி மற்றும் பல்கலைகழக ஆணையத்தினர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள், மாணவ மாணவியர் என சுமார் ஆயிரம் பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இளையோராகிய நீங்கள் ஐரோப்பாவின் எதிர்காலமாக இருக்கிறீர்கள், ஐரோப்பிய திருச்சபை உங்களை நம்பி இருக்கின்றது என்றார்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பாதையில் உண்மையைச் சுடர்விடச் செய்யும் இயேசு கிறிஸ்துவுக்குப் பல்கலைகழகச் சூழலில் சான்று பகருமாறும் 31 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அம்மாணவ மாணவியரிடம் கூறினார் திருத்தந்தை.

அறிவை வளர்ப்பதற்காக உழைப்பது பல்கலைகழகத்தின் சிறப்பு அழைப்பு என்றும் குறிப்பிட்ட அவர், அதில் ஒழுக்க மற்றும் ஆன்மீகப் பண்புகள் எப்பொழுதும் மேலோங்கி நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.