2009-07-11 15:39:32

காரித்தாஸ் இன் வெரித்தாத்தே, இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்ல வழிகாட்டி, பூனே ஆயர்


ஜூலை11,2009 திருத்தந்தை 16ம் பெனடிக்டின், காரித்தாஸ் இன் வெரித்தாத்தே அதாவது உண்மையில் பிறரன்பு என்ற திருமடல் உலகுக்கு வழங்கப்பட்டுள்ள மிக நேர்த்தியான கொடை மற்றும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக இருக்கின்றது என்று பூனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.

இந்திய ஆயர் பேரவையின் இறையியல் மற்றும் விசுவாசக் கோட்பாட்டு ஆணையத் தலைவரான ஆயர் தாப்ரே, திருத்தந்தையின் அண்மை திருமடல் பற்றி ஆசிய செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறினார்.

மனித முன்னேற்றத்திற்கென இவ்வேடு முன்வைத்துள்ள தொலைநோக்குக் கருத்துக்கள், இந்தியாவிற்கு மிகநேர்த்தியான வழிகாட்டிகளை வழங்கும் என்றும் பூனே ஆயர் கூறினார்.

உலகத்தாராளமயமாக்கலின் நடவடிக்கையால் நன்மை பெறுகின்ற மற்றும் வளர்ச்சியின் பாதையில் ஈடுபட்டுள்ள இந்தியாவிற்கு, திருத்தந்தையின் இவ்வழிகாட்டிகள், நன்மையைக் கொண்டு வரும் என்று அவர் மேலும் கூறினார்.

மனிதனை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தின் தேவையை இவ்வேடு எவ்வாறு விவாதித்துள்ளது என்று விளக்கிய ஆயர், வளர்ச்சி மனிதனை மையமாகக் கொண்டதாய் இருந்தால் உலகத்தாராளமயமாக்கலும் முன்னேற்றமும் செல்வமும் மனித குலத்திற்குத் தொண்டு செய்ய முடியும் எனறு கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.