2009-07-10 15:12:45

மெக்சிகோவின் புதிய தூதுவரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றார் திருத்தந்தை


ஜூலை10,2009 கத்தோலிக்கத் திருச்சபை சமய சுதந்திரத்தை அது ஏதோ ஒரு சலுகையாக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அல்ல, மாறாக அது ஒவ்வொரு தனிமனிதன், சமூகம் மற்றும் நாட்டிற்கும் உரிய மிக முக்கியமான கூறு என்பதால் அதனை வலியுறுத்துகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீடத்துக்கான மெக்சிகோவின் புதிய தூதுவர் ஹெக்டர் பெடரிக்கோ லிங் ஆல்ட்டாமிரானோவிடமிருந்து இன்று நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, மெக்சிகோவிற்கும் திருப்பீடத்துக்குமிடையேயான அரசியல் உறவு மீண்டும் உருவாக்கப்பட்டதன் 15ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் பற்றியும் பேசினார்.

மெக்சிகோ நாடு எதிர் நோக்கும் வன்முறை, போதைப் பொருள் வியாபாரம், சமத்துவமின்மை, ஏழ்மை போன்ற பிரச்சனைகளையும் குறிப்பிட்ட அவர், உண்மையான வாழ்வுக் கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புதல், மனச்சான்றுகளை உருவாக்கக் கற்றுக் கொடுத்தல், நன்னெறி வாழ்வைப் புதுப்பித்தல் ஆகியவை மூலம் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

இம்முயற்சியில் கத்தோலிக்கத் திருச்சபை தனது ஒத்துழைப்பை வழங்கும் என்றும் உறுதி கூறிய திருத்தந்தை, எல்லாச் சூழல்களிலும் வாழ்வதற்கான உரிமை மதிக்கப்படுமாறும் வலியுறுத்தினார்.

மெக்சிகோவில் 2005ம் ஆண்டில் மரண தண்டனை சட்டம் இரத்துச் செய்யப்பட்டதையும் அதன்பின்னர் மனித வாழ்வு, தொடக்கமுதல் இறுதி வரை காக்கப்படுவதற்கான வழிகள் குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகளையும் புதிய தூதுவரிடம் திருத்தந்தை பாராட்டினார்.

1904ம் ஆண்டில் மெக்சிகோவிற்கும் திருப்பீடத்துக்குமிடை உருவாக்கப்பட்ட அரசியல் உறவு, 1856க்கும் 1861க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அரசுத் தலைவர் Benito Juarez திருச்சபை சொத்துக்களை பறித்துக் கொண்டதையொட்டி அவ்வுறவு முறிந்தது. பின்னர் 130க்கும் மேறப்ட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் 1992ல் முதல் மீண்டும் அவ்வுறவு உருவாக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.