2009-07-10 15:11:21

திருத்தந்தையுடன் அரசுத் தலைவர் ஒபாமா சந்திப்பு


ஜூலை10,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமா திருத்தந்தை 16ம் பெனடிக்டை இன்று மாலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இத்தாலியின் லாக்குய்லா நகரில் நடைபெற்ற ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா அம்மாநாட்டின் இறுதி நாளான இவ்வெள்ளி மாலை திருத்தந்தையைச் சந்தித்தார்.

வத்திக்கானில் திருத்தந்தையின் தனிப்பட்ட நூலகத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பு மூலம் இவ்விடத்தில் திருத்தந்தையைச் சந்திக்கும் 12வது அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவராக ஒபாமா இருக்கிறார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் வுட்ரோ வில்சன் என்பவர் முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டில் அவரது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் போது அப்போதைய திருத்தந்தை 15ம் பெனடிக்டை வத்திக்கானில் சந்தித்தார். ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் முதன்முறையாக நடத்திய இச்சந்திப்புக்குப் பின்னர் நாற்பது ஆண்டுகள் கழித்து 1959ம் ஆண்டில் இரண்டாவது அரசுத் தலைவராக டுவைட் டி.ஐன்சென்ஹோவர் என்பவர், வத்திக்கானில் திருத்தந்தை 23ம் அருளப்பரை சந்தித்தார்.

பின்னர் திருத்தந்தை ஆறாம் பவுலை, 1963ல் ஜான் எப் கென்னடியும், 1967ல் லின்டன் பி. ஜான்சனும், 1969 மற்றும் 1970ல் ரிச்சர்டு எம்.நிக்சனும், 1975 ல் ஜெரால்டு ஆர். போர்டும் சந்தித்தனர்.

அதன்பின்னர் திருத்தந்தை 2ம் ஜான் பவுலை 1980ல் ஜிம்மி கார்ட்டரும் 1982 மற்றும் 1987ல் ரோனல்டு ரேகனும், 1989 மற்றும் 1991ல் ஜார்ஜ் ஹைச்.டபுள்யு புஷ்சும், 1994ல் பில் கிளின்டனும் 2001, 2002 மற்றும் 2004ல் ஜார்ஜ் டபுள்யு புஷ்சும் திருத்தந்தை 16ம் பெனடிக்டை 2008ல் ஜார்ஜ் டபுள்யு புஷ்சும் சந்தித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.