2009-07-09 15:38:59

ஆஸ்திரேலிய பிரதமர், தென்கொரிய அரசுத் தலைவர் லீ மியுங்-பாக், திருத்தந்தையைச் சந்தித்தனர்


ஜூலை09,2009 ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், தென்கொரிய அரசுத் தலைவர் லீ மியுங்-பாக் ஆகியோரை இன்று திருப்பீடத்தில் திருத்தந்தைசந்தித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ருட் திருத்தந்தையை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயையும் சந்தித்தார். இச்ந்திப்புகளில் சர்வதேச அளவில், சமய சுதந்திரம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டன, இன்னும் 2008ம் ஆண்டில் சிட்னியில் இடம் பெற்ற உலக இளையோர் மாநாடு பற்றிய நல்லுணர்வுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

இன்னும், நேற்றைய புதன் பொது மறை போதகத்தின் இறுதியில் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறையில், அரசுத் தலைவர்களின் மனைவிகளையும் சந்தித்தார் திருத்தந்தை.

ஜி8 நாடுகளின் தலைவர்கள், இந்தியா உட்பட மற்றும்சில வளரும் நாடுகளின் தலைவர்கள் பங்கு கொள்ளும் உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற்று வரும் வேளை,

இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் மனைவி குர்ஷரான் கவூர், உட்பட பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ, சுவீடன், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களின் மனைவிகள் இரண்டு இத்தாலிய அமைச்சர்களுடன் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினர்.

ஜப்பானிய பிரதமர் தாரோ ஆசோவும் அவரின் மனைவியும் கடந்த செவ்வாயன்று திருத்தந்தையை சந்தித்தனர்.

ஜி8 பணக்கார நாடுகளின் தலைவர்களின் இம்மாநாட்டில் இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து வளரும் நாடுகளும் கலந்து கொள்கின்றன. அனைத்து மக்களின், குறிப்பாக மிக ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உதவும் தீர்மானங்கள் இம்மாநாட்டில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.