2009-07-08 14:18:52

மிகப் பழமையான திருவிவிலியப் பிரதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது


ஜூலை08,2009 Codex Sinaiticus என்ற உலகில் இருக்கும் மிகப் பழமையான திருவிவிலியப் பிரதியின் 800 பக்கங்களும், www.Codexsinaiticus.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நூலகம், லெய்ப்பசிக் பல்கலைக்கழக நூலகம், எகிப்தின் சீனாய் மலையிலுள்ள புனித கத்ரீன் துறவுமடம், செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் இரஷ்ய தேசிய நூலகம் ஆகியவை சேர்ந்து இந்தப் பணியைச் செய்துள்ளன.

எழுதுவதற்காகப் பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் கிரேக்கத்தில் எழுதப்பட்ட நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் புத்தகம், 150 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் நான்கு இடங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இது பல நூற்றாண்டுகளாக திருத்தப்பட்டது.

பெரிய கான்ஸ்ட்டடைன் பேரரசன் காலத்தில் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் 1460க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருந்தது, எனினும் தற்சமயம் 800க்கும் மேற்பட்ட பக்கங்களே உள்ளன, இவை இணையதளத்தில் போடப்பட்டுள்ளதாக பிரிட்டன் டைம்ஸ் நாளிதழ் அறிவித்தது.

ஏறத்தாழ 1600 ஆண்டு பழமை கொண்ட இந்த விவிலியப் பிரதியை பார்ப்பதற்குப் பலர் விரும்பியதால் தற்சமயம் இணையதளத்தில் போடப்பட்டுள்ளதாக Codex Sinaiticus நிர்வாகி ஹூவான் கார்செஸ் தெரிவித்தார்.










All the contents on this site are copyrighted ©.