2009-07-08 14:15:18

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மூன்றாவது திருமடலுக்குத் திருச்சபைத் தலைவர்கள் பாராட்டு


ஜூலை08,2009 “காரித்தாஸ் இன் வெரித்தாத்தே” அதாவது உண்மையில் பிறரன்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்டின் மூன்றாவது திருமடலுக்குத் திருச்சபை மற்றும் பிற தலைவர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

இப்புதிய அப்போஸ்தலிக்க சுற்றுமடல் பற்றிக் கருத்து தெரிவித்த சிகாகோ கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ், தற்போதைய உலகின் சமூக, பொருளாதார மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த கேள்விகளுக்குப் பதிலைக் காண்பதற்கு இவ்வேடு வழிமுறைகளைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

மனித முன்னேற்றத்திற்கான அழைப்பு, உலகப் பொருளாதாரம் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய நன்னெறிக் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய சிறந்த சிந்தனைகளை இது தருகின்றது என்றுரைத்த அமெரிக்க கர்தினால், தொழில் அதிபர்கள், அரசுகள் தொழிற்சங்கங்கள் மற்றும் தனிமனிதர், உண்மையால் நடத்தப்படும் பிறரன்பின் ஒளியில் தங்களது பொருளாதாரப் பொறுப்புக்களை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு அழைப்புவிடுக்கின்றது என்றார்.

மேலும், இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் திருத்தந்தையின் “காரித்தாஸ் இன் வெரித்தாத்தே” என்ற திருமடலும் கத்தோலிக்க சமூகப் போதனைகளும் என்ற தலைப்பில் பிரிட்டன் ஆயர்கள், வருகிற அக்டோபர் 21ம் தேதி ஒருநாள் கருத்தரங்கை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வெஸ்ட்மின்ஸ்ட்டர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.