2009-07-08 14:14:11

ஜி8 நாடுகளின் தலைவர்களுக்கு திருத்தந்தையின் கடிதம்


ஜூலை08,2009 கல்வி, வளர்ச்சிக்கான உதவி, ஏழைநாடுகளின் வெளிநாட்டு கடன் இரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தி உலகின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கு முயற்சிக்குமாறு ஜி8 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்தாலியின் லாக்குய்லா நகரில் இப்புதனன்று தொடங்கிய ஜி8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு திருத்தந்தை எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனிதரில் மூலதனம் செய்வது, ஏழை நாடுகளுக்கான வளர்ச்சித் திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்தல், அதனை அதிகரித்தல், தொழிற்நுட்ப ரீதியாக இல்லாமல் நன்னெறி விழுமியத்தின் அடிப்படையில் தீர்வு காண்பது, பொருளாதார அளவில் பெரும் வெற்றி காணும் பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஏழை நாடுகளுக்கும் செவிமடுத்தல் ஆகியவை தற்போதைய உலகளாவிய பொருளாதாரப் பிரச்சனைக்கானத் தீர்வு என்று திருத்தந்தையின் கடிதம் சுட்டிக் காட்டுகிறது.

தற்சமயம் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி, வெப்பநிலை மாற்றம் ஆகியவை பற்றிப் பரிசீலனை செய்யுமாறும் கேட்டுள்ள அக்கடிதத்தில் திருத்தந்தை, மனித ஒருமைப்பாடு, உண்மையில் பிறரன்பு ஆகிய மதிப்பீடுகளால் உள்ளுணர்வு பெற்ற முழு மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதாய் உலகளாவிய வளர்ச்சியின் உருவை அமைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழிற் வளர்ச்சியடைந்த ஜி8 பணக்கார நாடுகளின் தலைவர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட மற்றும் சில தலைவர்கள் தொடங்கியுள்ள 3 நாள் உச்சி மாநாடு இவ்வெள்ளியன்று நிறைவு பெறும்.

 








All the contents on this site are copyrighted ©.