2009-07-06 15:32:38

பிலிப்பைன்ஸில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்குத் திருத்தந்தை கண்டனம்


ஜூலை06,2009 பிலிப்பைன்ஸில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்குக் கண்டனம் தெரிவித்த அதேவேளை, வன்கொடுமை, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழியாக இல்லை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இஞ்ஞாயிறு காலை பிலிப்பைன்ஸின் கோட்டாபாட்டோ அமலஉற்பவ பேராலயத்தில் பேராயர் ஒர்லாண்டோ கெவெதோ திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது அப்பேராலயத்திற்கு வெளியே இடம் பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

அறிவற்ற இச்செயலில் பலியானவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாக ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை, இவ்வன்செயலுக்கு எதிராக மீண்டும் கண்டனக் குரல் எழுப்புவதாகக் கூறினார்.

இவ்வன்கொடுமைக்கு, பன்னிரண்டாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மோரோ இசுலாம் பிரிவினைவாதக் குழு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

மேலும், வடஇத்தாலியில் இரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளை, பணியிடங்களில் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுமாறும் மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

கடந்த திங்கள் இரவு வியாரெஜ்ஜோவில் எரிவாயு ஏற்றிச் சென்ற இரயிலின் இரண்டு பெட்டிகள் வெடித்ததில் குறைந்தது 22 பேர் இறந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.