2009-07-03 15:50:30

இந்திய இலத்தீன் ரீதி ஆயர்களின் குருக்கள் ஆண்டிற்கானச் சிறப்பான திட்டங்கள்


ஜூலை03,2009. குருத்துவ வாழ்வு மீது அதிகமான இளையோருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இச்சர்வதேச குருக்கள் ஆண்டில் சிறப்பான திட்டங்களை நடத்துவதற்கு இந்திய இலத்தீன் ரீதி ஆயர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

குருக்கள் இல்லையென்றால் திருப்பலி இல்லை, திருப்பலி இல்லையென்றால் திருச்சபை இல்லை என்ற சுவரொட்டிகள் நாடெங்கும் விநியோகிக்கப்படவிருக்கின்றன என்று, இந்திய இலத்தீன் ரீதி ஆயர்கள் பேரவையின் குருக்கள் ஆணையச் செயலர் அருட்திரு ஜான் குழந்தை கூறினார்.

இந்திய இலத்தீன் ரீதி ஆயர்கள் தயாரித்துள்ள இச்சுவரொட்டிகள் பற்றி யூக்கா செய்தி நிறுவனத்திடம் பேசிய குரு ஜான் குழந்தை, இவை குருத்துவத்திற்கான அழைத்தலை ஊக்குவிக்கவும், குருத்துவத்தைப் போற்றி குருக்களுக்காகச் செபித்து அவர்களோடு பணி செய்யவும் வலியுறுத்துகின்றன என்று தெரிவித்தார்.

எனினும் குருத்துவத்திற்கான அழைத்தல்களில் தரத்தையும் அதேசமயம் எண்ணிக்கையையும் ஆயர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

வருகிற நவம்பரில் வாரனாசியிலும், டிசம்பரில் பெங்களூரிலும் தேசிய அளவில் குருக்களுக்கென இரண்டு கருத்தரங்குகள் நடைபெறும் என்று அறிவித்த குரு ஜான் குழந்தை, இக்கருத்தரங்குகள், 5 முதல் 10 ஆண்டுகள் குருக்களாக இருப்பவர்களுக்கு அதிகக் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இந்தியாவின் 160 மறைமாவட்டங்களில் 128 இலத்தீன் ரீதியைச் சேர்ந்தவை.








All the contents on this site are copyrighted ©.