2009-07-01 14:44:10

போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமெரிக்க காங்கிரஸ் அவை உறுப்பினர்களின் முயற்சிக்கு இந்திய திருச்சபைத் தலைவர்கள் பாராட்டு


ஜூலை01,2009 போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் டவ் வேதியல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதைப் பாராட்டியுள்ளனர் இந்திய திருச்சபைத் தலைவர்கள்.

விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவ மற்றும் பொருளாதார மறுவாழ்வுக்கு உதவுமாறு அமெரிக்க காங்கிரஸ் அவையின் 27 உறுப்பினர்கள், டவ் வேதியல் நிறுவனத் தலைவர் ஆன்ட்ரு லிவெரிசுக்கு கடந்த மாதம் 27ம் தேதி கடிதம் அனுப்பியதை முன்னிட்டு அதற்கானத் தங்கள் வரவேற்பை வெளியிட்டனர்.

இது குறித்துப் பேசிய போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, இந்நடவடிக்கை தாமதமாக இடம் பெற்றாலும், தற்போது எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி போபாலில் யூனியன் கார்படைடு தொழிற்சாலையிலிருந்து 42 டன்கள் மீத்தைல் இஸ்னோ சையனைட் விஷவாயு வெளியேறியதால் ஒரே நாளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரும் ஒருவாரத்திற்குள் சுமார் எட்டாயிரம் பேரும் இறந்தனர்.

மொத்தத்தில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் பேர் இந்த வாயுவினால் பாதிக்கப்பட்டனர். இவ்வாயுக்கசிவால் காற்று, மண், தண்ணீர் ஆகியவை பாதிக்கப்பட்டதால் கடந்த 25க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என நம்பப்படுகிறது.

உலகில் இடம் பெற்றுள்ள தொழிற்சாலை விபத்துக்களில் மிக மோசமானதாக வருணிக்கப்படும் போபால் விஷவாயு கசிவுக்குப் பின் பிறந்த குழந்தைகள் பல்வேறு உள மற்றும் உடல் பாதிப்புக்களைப் பெற்றுள்ளனர் என்று போபால் உயர்மறைமாவட்ட சமூகநலப்பணி அமைப்பின் இயக்குனர் குரு மத்யூ வட்டக்குழி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.