2009-07-01 14:45:42

இராக்கில் நம்பிக்கையும் அச்சமும் எதிர்காலம் பற்றிய கரிசனையும் நிலவுவதாக கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகள் அறிவித்தனர்


ஜூலை01,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் இராக்கின் நகர்ப் பகுதிகளிலிருந்து விலக ஆரம்பித்துள்ள வேளை, அந்நாட்டில் நம்பிக்கையும் அச்சமும் எதிர்காலம் பற்றிய கரிசனையும் நிலவுவதாக கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய ஒப்புரவு என்ற பெயரில் நாட்டின் எதிர்காலம் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்த இராக் ஆயர்கள், இன மற்றும் சமயப் பாகுபாடுகள் இன்னும், குழப்பத்தை ஏற்படுத்த விரும்பும் வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தல் காணப்படுவதையும் குறிப்பிட்டனர்.

அமெரிக்கப் படைகளின் விலகல் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய கிர்குக் கல்தேயரீதி பேராயர் லூயிஸ் சாக்கோ, கிறிஸ்தவக் குடும்பங்களில் எதிர்காலம் பற்றிய பயமும் கவலையும் இருப்பதாகக் கூறினார்

சதாம் ஹுசைனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு நடந்த ஆறு வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் அதிகாரப்பூர்வமாக இச்செவ்வாயன்று இராக்கின் நகரப் பகுதிகளில் இருந்து விலகியுள்ளன. இந்த நடவடிக்கையானது 2011ம் ஆண்டு இறுதிவரை இடம் பெறும்.

தற்சமயம் இராக்கின் 13 முக்கிய தளங்களில் ஏறத்தாழ 1,35,000 அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் இருக்கின்றன. ஏறத்தாழ 10 இலட்சம் இராக் காவல்துறையினரும் படைகளும் நகர மையங்களின் நிர்வாக எல்லைகளுக்குள் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, பாக்தாதையும் ஏனைய நகரங்களையும் இராக்கிய படைகள் பொறுப்பேற்கும் இந்தத் தினத்தை குறிக்கும் வகையில், அங்கு இசை நிகழ்ச்சிகளும், தெருக் கொண்டாட்டங்களும் நடக்கின்றன.

பெரும்பாலும் ஷியா பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அலையலையான தாக்குதல்களில், கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம், சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.