2009-06-29 15:16:09

மாறிய மாமனிதன் புனித பவுல்


சூன்29,2009. ஒரு கவிதைப் பெட்டகத்தைத் திறந்து வாசித்த போது, “சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பேசிய வார்த்தைகள், கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்? அவன் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவன்” என்று எழுதப்பட்டிருந்தன. தினத்தாள் ஒன்றைப் புரட்டிய போது “மகன் இறப்பால் மனம் திருந்திய திருடன்” என்ற தலைப்பு எம்மை ஈர்த்தது. சென்னை மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் 12.50 மணியளவில் பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்களை எடுத்து ஆய்வு செய்த அஞ்சல்விநியோகக்காரர் கந்தன் என்பவர் தபால்தலை ஒட்டப்படாத கவரைப் பார்த்ததும் அதைக் கண்காணிப்பாளரிடம் கொடுக்கச் சென்ற போது அதிலிருந்து 187.5 கிராம் தங்க நகைகளும் அன்னை தெரேசா உருவம் பொறிக்கப்பட்ட மூன்று டாலர்களும் ஒரு கடிதமும் கீழே விழுந்திருக்கின்றன. அக்கடிதத்தில், “நான் நகையைத் திருடிய பின்னர் எனக்கு விபத்து ஏற்பட்டது. அதில் எனது குழந்தை இறந்து விட்டது. அதனால் கடவுள் என் கண்களைத் திறந்து விட்டார். நான் மனம் மாறிவிட்டேன்” என்று எழுதப்பட்டிருந்ததாம்.

மனிதன் என்பவன் மாறுபவன். அவன் சூழ்நிலைக்கு ஏற்பவோ அல்லது சூழ்நிலைகளாளோ மாறுகிறான் என்பதை அன்றாட நடப்புகளில் காண முடிகின்றது. சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் பல பச்சோந்தி மனிதரைக் காண முடிகின்ற இந்தக் காலத்தில், பலர் சூழ்நிலைகளாலும் புது மனிதர்களாக மாறி வரலாறும் படைத்திருக்கிறார்கள். இவ்வாறு சூழ்நிலையால் மாறி சாதனையில் உயர்ந்து நிற்பவர் தர்சு நகர் புனித பவுல் என்ற மாமனிதர். வத்திக்கான் வானொலி அன்பர்களே, இந்தப் புனித பவுல் பற்றி, அதுவும் கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதியிலிருந்து நமது நிகழ்ச்சிகளிலும் செய்திகளிலும் அடிக்கடி கேட்டிருக்கிறீர்கள். இவர் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டுக்குத் கத்தோலிக்கத் திருச்சபையில் ஓராண்டு ஜூபிலி கொண்டாடி அது இஞ்ஞாயிறோடு நிறைவுக்கும் வந்துள்ளது. ஒரு தனிப்பட்ட மனிதருக்கென ஓராண்டை அர்ப்பணித்து அவரைத் திருச்சபை கவுரவித்துள்ளது என்றால் அவர் எத்துணை உயர்ந்த மனிதராக இருக்க வேண்டும்? ஆனால் அவரது பிறப்பு, குடும்பம், படிப்பு போன்றவற்றைப் பார்க்கும் போது அவருக்கும் கிறிஸ்தவத்துக்கும் எந்தத் தொடர்புமே இல்லை. யூதக் கோட்பாடுகளையும் யூத நெறிமுறைகளையும் இளமையிலிருந்தே கற்றறிந்தவர். அக்காலத்தில் உலகப் பொது மொழியாக இருந்த கிரேக்கத்தையும் கற்றுத் தெளிந்தவர். யூதசமயத்தில் மிகுந்த ஆர்வமாக இருந்தவர். தொடக்க காலக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர். புனித முடியப்பரைக் கல்லால் எறிந்து கொல்வதற்கு உடன்பட்டிருந்தவர். எனினும் புனித பவுல் இத்தனை சிறப்புப் பெறக் காரணமாக இருந்தது என்ன?.

இதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அவரது தமஸ்கு சாலை அனுபவம். பவுல், ஒருநாள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு சென்ற போது வழியில் உயிர்த்த கிறிஸ்து அவரைத் தடுத்தாட் கொண்டார். சவுலே, சவுலே, நீ துன்புறுத்தும் கிறிஸ்து நானே என்ற குரலைக் கேட்டார். புனித பவுல் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டு வந்த ஜூபிலி ஆண்டை இஞ்ஞாயிறன்று நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்டும் தமது மறையுரையில் இந்தப் பவுலது தமஸ்கு அனுபவம் பற்றிக் கூறினார். உரோமையில் புனித பவுல் கல்லறை மீது கட்டப்பட்டுள்ள பசிலிக்காவில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுடன் இஞ்ஞாயிறு மாலை திருப்புகழ்மாலை செபித்து மறையுரையாற்றிய திருத்தந்தை, புனித பவுல் தமஸ்கு அனுபவத்திற்குப் பின்னர் நற்செய்தியின் தீப்பந்தமாக மாறி அதற்காகத் தமது உயிரையே அளிக்கும் அளவுக்குப் பல துன்பங்களை எதிர்நோக்கினார் RealAudioMP3 என்றும் கூறினார்.

புனித பவுலே தனது மனமாற்ற அனுபவத்தையும் இந்த நற்செய்திப் பணியில் தான் எதிர் கொண்ட வேதனைகளையும் தமது கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கொரிந்தியருக்கு எழுதிய 2வது கடிதம், 11ம் அதிகாரத்தில், பன்முறை சிறையில் அடைபட்டேன்: கொடுமையாய் அடிபட்டேன்: ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்: ஒருமுறை கல்லெறிபட்டேன்: மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்: ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்: அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பன்முறை கண்விழித்தேன்: பசிதாகமுற்றேன்: பட்டினி கிடந்தேன்: குளிரில் வாடினேன்: ஆடையின்றி இருந்தேன் என்று எழுதியிருக்கிறார்.

புனித பவுல் என்ற மாமனிதர் தமது கடிதங்களில் நாம் அனைவருக்கும் முன்வைத்துள்ள சில அழைப்புக்களை, குறிப்பாக நாம் புது மனிதர்களாக வாழ வேண்டும் என்று பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பத RealAudioMP3 ைத் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இந்த உலகம் தற்போதைய உண்மைத்தன்மையில் மகிழ்ச்சியற்று இருப்பதால் அது எப்பொழுதும் புதியனவற்றை நோக்குகின்றது. புதிய மனிதர்கள் இன்றி இவ்வுலகம் புதுப்பிக்கப்பட முடியாது. புதிய மனிதர்கள் இருந்தால்தான் புதுப்பிக்கப்பட்ட, நல்லதோர் உலகம் அமையும். புதியவராக மாறிய பவுலிடம் புதிதாக இருந்தது என்ன? அவர் தனக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்ந்தார். கிறிஸ்துவில் வாழ்ந்தார். அவருக்கு எல்லாமே கிறிஸ்துவாக இருந்தது. பழைய மனிதனுடைய சிந்தனைகள், எண்ணங்கள் எல்லாம் புகழ், வெற்றி, நல்வாழ்வு, அனைத்தையும் கொண்டிருத்தல் போன்றவற்றை நோக்கி இருக்கும். வாழ்க்கையில் இவை ஒரு வரையறைக்கு உட்பட்டிருக்கும் இறுதியில் ஒருவர் தானே இவ்வுலகின் மையமாக இருப்பார். எனவே நாம் இயேசு கிறிஸ்துவின் சிந்தனைகளையும் விருப்பத்தையும் பகிர்ந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே நாம் புதிய மனிதர்களாக மாறுவோம். அப்போது புதிய உலகமும் மலரும்.

இன்றைய உலகின் பெரும் பிரச்சனைகள், மனிதர் தங்கள் அகவாழ்வில் வெறுமையை, தங்கள் உள்ளத்தில் வெற்றிடத்தை, பலவீனத்தை உணர்வதே. இதனால் போதைப் பொருட்களையும் போலியான வாக்குறுதிகளையும் நம்புகிறார்கள். எனவே மனிதனின் அகவாழ்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும். கிறிஸ்துவின் பிரசன்னம் எங்கு வளர்கின்றதோ, அங்கு உண்மையான முன்னேற்றம் இடம் பெறும். இத்தகைய வாழ்வில் நாம் புனித பவுலைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவர் நமக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றார் என்று திருத்தந்த RealAudioMP3 ை 16ம் பெனடிக்ட் கூறினார்.

அன்பர்களே, தூய பவுலில் ஏற்பட்ட மாற்றம் சாதாரணமானது அல்ல. அவரது வாழ்வை அப்படியே புரட்டிப் போட்ட மாற்றம் அது. கிறிஸ்து என்ற பெயரைக் கேட்டாலே அவர்களைக் கொல்ல வேண்டும் என்று துடித்த பவுல், தமஸ்கு செல்லும் சாலையில் கிறிஸ்துவின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அவரிலிருந்த பழைய கொலை வெறி பறந்து போய்விட்டது. தான் நடந்து வந்த பாதையை அப்படியே தலைகீழாக மாற்றினார். யாரிடமெல்லாம் கிறிஸ்தவர்களை எதிர்த்தாரோ அவர்களிடமெல்லாம் அஞ்சா நெஞ்சுடன் கிறிஸ்துவுக்காக வாதாடினார்.

ஆம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புனித பவுல் உரோமையர்களைக் கேட்டுக் கொண்டது போல, நாம் இந்த உலகத்தின் போக்கின்படி நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் நமது உள்ளங்களை புதுப்பித்து முற்றிலும் மாற்றம் பெற வேண்டும். அப்போது கடவுளின் திருவுளம் எது, எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் பலர், தங்களது இறக்கும் நேரம் வரும்வரை எப்படி வாழ்வதென்பதைக் கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள், இது வெட்கத்துக்குரியது என்கிறார் ஒரு துறவி. ஒரே மாதிரியான செயல்களைச் செய்து கொண்டு வித்தியாசமான பலன்களை எதிர்பார்க்கிறார்கள் என்றார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். ஆதலால் வாழ்க்கையில் நமக்குப் புதிய பலன்கள் கிடைக்க வேண்டுமெனில் புதிய வழிகளில் நடக்க வேண்டும்.

நமது செயல்நோக்கத்தில் விடா முயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது அமைதியாகச் செயல்பட்டு ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும். புதிய வழிகளில் செல்வதற்குத் தைரியம் தேவை. தைரியம் என்பது பயமின்றி இருப்பது அல்ல. ஆனால் வாழ்க்கையில் முக்கியமான இலக்கை அடைவதற்கு பயத்தின் ஊடாக நடப்பதற்கான விருப்பமே தைரியம். எனவே அன்பர்களே, தெரியாத ஒன்றைப் பற்றிப் பயப்படாமல், துணிந்து மாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் புதிய மனிதர்கள் உருவாகுவார்கள். புதிய உலகமும் உருவாகும். வாழ்க்கையில் வெற்றியை நினைப்பதும் அதனைக் கற்பனை செய்வதும் அது நிச்சயம் நிறைவேறும் என்ற முழுநம்பிக்கையும் நிரம்பவே பெற்றவர்கள் பலர் புதியவர்களாக உருமாறியிருக்கிறார்கள். மாற்றம் கண்ட இவர்களே மனிதர்கள்.








All the contents on this site are copyrighted ©.