2009-06-29 15:43:23

புனித பவுல் குருக்களுக்கு எடுத்துக்காட்டு, திருத்தந்தை


சூன்29,2009. கிறிஸ்து மற்றும் நற்செய்தி மீது பேரன்பு கொள்வதற்கானப் பாதையில் அனைவரும் புனித பவுலைப் பின்பற்றி நடக்குமாறு கூறினார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறு மாலை புனித பவுல் ஆண்டு நிறைவடைந்துள்ள வேளை, இந்த ஜூன் 19ம் தேதி தொடங்கப்பட்ட சர்வதேச குருக்கள் ஆண்டில் புனித பவுல் அனைத்துக் குருக்களுக்கும் நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும் கூறினார் அவர்.

இன்றைய உலகில் குருக்கள் நற்செய்திக்கு உறுதியான சான்றுகளாக வாழவும் தங்களது அகவாழ்வைப் புதுப்பிப்பதற்கும் இக்குருக்கள் ஆண்டு உதவும் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

தர்சு நகரின் திருத்தூதர் புனித பவுல் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு தொடங்கப்பட்ட புனித பவுல் ஆண்டு, திருவருளின் உண்மையான காலமாக இருந்தது, திருப்பயணங்கள், மறைக்கல்விகள், வெளியீடுகள், இன்னும், பல்வேறு முன்னெடுப்புகள் வழியாக புனித பவுல் என்ற மனிதர் அகிலத் திருச்சபைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளார், இப்புனிதரின் உயிர்த்துடிப்பான செய்தி, எல்லா இடங்களிலும் கிறிஸ்தவ சமூகங்கள் மத்தியில் கிறிஸ்து மற்றும் நற்செய்தி மீதான பேரார்வத்தைத் தட்டி எழுப்பியுள்ளது என்றும் திருத்தந்தை கூறினார்.

புனித ஜான் மரிய வியான்னி செய்தது போல புனித பவுல் தனது நற்செய்தி பணி மூலம் குருவுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்ற அவர், எல்லாமே கடவுளின் அருளால் நடைபெறுகிறது என்று அவரால் சொல்ல முடிந்தது என்றார்.

கிறிஸ்துவின் அன்பு நம்மை உந்தித்தள்ளுகிறது என்று அப்போஸ்தலர் பவுல் எழுதியிருக்கிறார், இது ஒவ்வொரு குருவின் விருதுவாக்காக இருக்க முடியும், உண்மையில் ஒரு குரு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் முழுவதும் சொந்தமானவர், பிரமாணிக்கமுள்ள கணவன் தனது மனைவியிடம் இருப்பது போல குருவும் தனது பிளவுபடாத அன்பினால் கிறிஸ்துவுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்றார் திருத்தந்தை.

குருக்கள் புனிதத்துவத்தில் வளரவும் அவசியமானால் மறைசாட்சி வாழ்வு வழியாக சான்று பகரத் தயாராக இருக்கவும் புனித கன்னிமரியிடம் செபிப்போம் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.