2009-06-27 15:37:21

கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே முழுஒன்றிப்பு ஏற்படுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபை தனது ஒத்துழைப்பை வழங்கும், திருத்தந்தை


சூன்27,2009. கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே முழுஒன்றிப்பு ஏற்படுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபை எல்லா வழிகளிலும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை பிரதிநிதி குழுவை இன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கத்தோலிக்க மற்றும் ஆர்த்தோடாக்ஸ் சபைகளுக்கிடையேயான சர்வதேச இறையியல் உரையாடல் அவையின் பணிகள் நல்ல பலன்களைத் தரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

வருகின்ற அக்டோபரில் நடைபெறவுள்ள இச்சர்வதேச இறையியல் உரையாடல் அவையின் கூட்டம், கிழக்குக்கும் மேற்குக்குமிடையேயான உறவுகள், இன்னும் முதல் ஆயிரம் ஆண்டுகளின் போது திருச்சபையில் உரோம் ஆயரின் இடம் போன்ற முக்கிய தலைப்புகள் பற்றி ஆராயவிருப்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இந்த இவ்விரு சபைகளுக்குமிடையேயான உரையாடலுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை தனது முழு ஆதரவைக் கொடுக்கின்றது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் இக் கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவிடம் தெரிவித்தார் திருத்தந்தை.

கடந்த ஆண்டில் புனித பவுல் ஜூபிலி ஆண்டு தொடங்கிய போது அந்நிகழ்வில் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயோ கலந்து கொண்டது மற்றும் அவ்வாண்டின் நிறைவில் தற்சமயம் அச்சபையின் பிரதிநிதி குழு வந்திருப்பது குறித்தத் தனது மகிழ்வையம் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கிறிஸ்தவ ஒன்றிப்பின் எஜமானர்கள் என்றழைக்கப்படும் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழா இத்திங்களன்று சிறப்பிக்கப்படுவதையும் ஆர்த்தோடாக்ஸ் சபை திருவழிபாட்டில் இப்புனிதர்கள் முக்கிய இடம் பெறுவதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை பிரதிநிதி குழு ஒன்று புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவில் கலந்து கொள்வதற்கென்று வத்திக்கான் வருவது வழக்கமாக உள்ளது. புனித பிலவேந்திரர் விழாவில் கலந்து கொள்ள திருப்பீட பிரதிநிதி குழு கான்ஸ்டான்டிநோபிள் செல்வது வழக்கம்.








All the contents on this site are copyrighted ©.