2009-06-27 09:05:23

வழிபாட்டு ஆண்டின் 13 ஆவது ஞாயிறு . மறையுரை .280609 .


இயேசு நாதர் அவரது மறைப்பணியில் பல நாட்களை மக்களுக்கு உடல்நலமளிப்பதிலும் , நோய்களைக் குணப்படுத்துவதிலும் செலவிட்டார் . அவர் மருத்துவத் தொழில் செய்யவில்லை . ஆனால் உண்மையாகவே குணமளிக்கும் பணிசெய்தார் . அவருடைய புகழ் பரவிற்று . மக்கள் அவரிடம் நலம்பெற குவியத்தொடங்கினார்கள் .

இன்றைய நற்செய்தியில் ஒருவர் இயேசுவிடம் வந்து நோய்வாய்ப்பட்டிருக்கும் அவருடைய மகளை அவரது வீட்டுக்கு வந்து குணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறார் . செல்லும் வழியில் பன்னிரண்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருக்கும் பெண் ஒருவர் கூட்டத்துக்குள் இயேசுவிடம் நெருங்கிச் சென்று அவருடைய ஆடையைத் தொட்டால் போதும் , நலம் பெற முடியும் எனத் தனக்குள்ளே சொல்லிக்கொண்டு இயேசுவின் மேலாடையைத் தொடுகிறார் . அந்த இடத்திலேயே குணம் பெறுகிறார்் . இயேசுவின் மீது கொண்டிருந்த விசுவாசம் காரணமாகக் குணம் பெறுகிறார் .

வியாதியாக இருந்த சிறுமி இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்தும் இயேசு தொடர்ந்து அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்று உயிரளிக்கிறார் . உண்மையான கடவுள் பற்றும் நல்ல மருத்துவமும் இயேசுவில் இணைகின்றன . இன்றும் அவை தொடர்ந்து சமுதாயத்துக்கு நன்மை செய்துவருகின்றன .

அருள் சாதனங்கள் வழியாக திருச்சபை நலம் பயந்து வருகிறது . ஒப்புரவு அருள்சாதனம் ஒருவரை நலமாகவும் உறுதியாகவும் வாழ உதவுகிறது . நோயில் பூசுதல் விசுவாச்த்தோடு அணுகும்போது ஆறுதல் அளித்து , உறுதிப்படுத்தி , அதைப்பெறுவருக்கு அவருடைய மனக்ககாயங்களிலிருந்தும் , அச்சத்திலிருந்தும் குணமளிக்கிறது . கடவுள் பற்று குணமளிப்பதை நாம் இதில் உறுதியாகக் காணமுடியும் .

ஆலயங்களில் நாம் நோயுற்றவர்களுக்காக வேண்டுகிறோம் . வியாதியுற்றவருடைய மன நிலையைப்பொறுத்தும் செபிக்கின்றவருடைய நம்பிக்கையைப் பொறுத்தும் குணம் கிடைக்கிறது . நலமின்றி இருந்த சிறுமி உடல்நலத்துக்காக இயேசுவிடம் விண்ணப்பிக்கவில்லை . ஆனால் அச்சிறுமியின் தந்தை இயேசுவிடம் தம் மன்றாட்டை வைத்தார் . அச்சிறுமிக்கு ஒருவேளை இயேசுவைப்பற்றித் தெரியாதிருந்திருக்கலாம் . ஆனால் அவரது தந்தைக்கு இயேசுவின் சக்தியைப் பற்றித்தெரியும் . அவரது நம்பிக்கையை முன்னிட்டு இயேசு அவருடைய மகளுக்கு உயிர் அளித்துக் காப்பாற்றினார் .

எல்லாப்புதுமைகளும் நாடகப்பாணியில் பொதுமேடையில் தொலக்காட்சியாளர்கள் படமெடுக்க அரங்கேற்றமாகும் என நாம் நினைக்கக் கூடாது . உண்மையான குணமடைதல் தனிப்பட்டதும் மறைவாக நடப்பதுமாகும் . நற்செய்தியில் 12 ஆண்டுகளாக வியாதியால் துன்புற்ற பெண்மணி நலமடைந்தது அவருக்குத்தான் தெரிந்தது . அவள் அருகிலிருந்தவர்களுக்குக் கூடத் தெரியவில்லை . சிறுமிக்கு உடல்நலமும் உயிர்ப்பிச்சையும் அளிப்பதற்குமுன் இயேசு அங்குக் கூடியிருந்த மக்களை வெளியேற்றிவிட்டார் . பொதுமக்களின் பாராட்டுதலை இயேசு எதிர்பார்க்கவில்லை .

இயேசு புரிந்த புதுமைகள் மந்திரத்தாலோ , தானாகவோ நடக்கவில்லை . அவை கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக நிகழ்ந்தவை . எனவே நாம் நம்பிக்கையோடு செபிக்க வேண்டும் . நலம்பெற நாம் விரும்பினால் நாம் கடவுள் நம்பிக்கையோடு செபிக்கவேண்டும் .








All the contents on this site are copyrighted ©.