2009-06-26 15:43:06

புனித பவுலின் செய்தியை உலகினர் அனைவரும் தொடர்ந்து ஏற்று செயல்பட கர்தினால் மொந்தெசெமோலோ அழைப்பு


சூன்26,2009. புறவினத்தாரின் திருத்தூதராகிய புனித பவுலின் செய்தியை அவர் காலத்தவர் போன்று இக்காலத்திலும் உலகினர் அனைவரும் தொடர்ந்து ஏற்று செயல்படுமாறு புனித பவுல் ஆண்டு அழைப்புவிடுக்கிறது என்று கர்தினால் அந்த்ரேயா கோர்தெரோ லான்சா தி மொந்தெசெமோலோ கூறினார்.

புனித பவுல் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நிருபர் கூட்டத்தில் பேசிய உரோம் புனித பவுல் பசிலிக்காவின் அதிபர் கர்தினால் மொந்தெசெமோலோ, இவ்வாண்டு தொடங்கிய விதம், இவ்வாண்டில் நடைபெற்றவை மற்றும் இவ்வாண்டு முன்வைக்கும் வேண்டுகோள்களை விளக்கினார்.

2008ம் ஆண்டு ஜூன்28ம் தேதி புனித பவுல் பசிலிக்காவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டைத் தொடங்கி வைத்தது முதல் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அங்கு வருவது பற்றியும் 2009ம் ஆண்டு மே மாதம் ஒன்றாந்தேதி மட்டுமே எட்டாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் வந்தது பற்றியும் அம்மை வாரங்களில் ஒரு நாளைக்கு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் வருவதைப் பார்க்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார் அவர்.

புனித பவுல் பிறந்ததன் இரண்டாயிரமாம் ஆண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த ஜூபிலி ஆண்டில் இறைவார்த்தை பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் முதல் திருச்சபையில் பல நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் கர்தினால் மொந்தெசெமோலோ கூறினார்.

புனித பவுலோடு தொடர்புடைய புனிதபூமி, தமாஸ்கஸ், தர்சு, சைப்ரஸ், ஏத்தென்ஸ், மால்ட்டா, லெபனன் ஆகிய ஏழு இடங்களில் இவ்வாண்டை நிறைவு செய்வதற்கு திருத்தந்தை தமது பிரதிநிதிகளாக கர்தினால்களை நியமித்திருப்பது பற்றியும் அவர் கூறினார்.

புனித பவுல் ஆண்டின் ஒரு நிகழ்வாக புனித பவுல் பசிலிக்காவின் தலைமை பலிபீடத்திற்கு அடியிலுள்ள புனித பவுலின் கல்லறையின் ஒருபகுதி திறக்கப்பட்டதையும் குறிப்பிட்ட அவர், கடந்த 20 நூற்றாண்டுகளாக இருக்கும் புனித பவுலின் கல்லறை இவ்வாண்டில் முதன்முறையாகத் திறக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.