2009-06-26 15:44:13

பணக்கார நாடுகள் ஏழைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், வளரும் நாடுகளுக்கு உதவுவம் கானட நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தல்


சூன்26,2009. இத்தாலியில் வருகிற ஜூலையில் நடைபெறவுள்ள பணக்கார நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஏழைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், வளரும் நாடுகளுக்கு உதவுவதற்குமான தீர்மானங்கள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளனர் கானட நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

ஜி8 என்ற தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளின் ஆயர் பேரவைகளின் சார்பில் இதனை வலியுறுத்துவதாகக் கூறியுள்ள கானட நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ஜேம்ஸ் வெய்ஸ்கெர்பெர், பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரிக்காதிருப்பதைத் தடை செய்வதற்கு உலகின் பொருளாதார சக்திகளோடு பேச்சுவார்த்தை நடத்துமாறும் கேட்டுள்ளார்.

கானட பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பெருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தியுள்ள ஆயர் வெய்ஸ்கெர்பெர், உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் இம்மாநாடு நடைபெறுவதைக் குறிப்பிட்டு இதன் செயல்பாடுகள் உலகுக்கு நம்பிக்கையைக் கொண்டுவர முடியும் என்று கூறியுள்ளார்.

ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு பிரிட்டன் பிரதமருக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய கடிதத்தையும் கானட ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கானட நாட்டு ஆயரின் இக்கடிதம் ஜி8 நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஜி8 நாடுகளின் தலைவர்களின் மாநாடு இத்தாலியின் லாக்குய்லாவில் அடுத்த மாதம் 8 முதல் 10 வரை நடைபெறுகின்றது.








All the contents on this site are copyrighted ©.