2009-06-26 15:47:10

எந்தவொரு சமுதாயத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் சித்ரவதைகள் நடத்தப்படுவதை நியாயப்படுத்த முடியாது, ஐ.நா.பொதுச் செயலர்


சூன்26,2009. சித்ரவதைகளைத் தடை செய்வதற்குச் சட்டரீதியாகவும் நிர்வாக அமைப்புகள் வழியாகவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இந்நடவடிக்கை பரவலாக அரசுகளால் இன்னும் சகித்துக் கொள்ளப்பட்ட அல்லது ஏன் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி முனின் செய்தி கூறுகிறது.

சித்ரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவாக இவ்வெள்ளிக்கிழமை சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு பான் கி முனின் வெளியிட்ட செய்தி இவ்வாறு கூறுகிறது.

எந்தவொரு சமுதாயத்திலும் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் இந்த மனிதாபிமானமற்ற, மனிதத்தைக் கீழ்மைப்படுத்தும் சித்ரவதைகள் நடத்தப்படுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அச்செய்தி கூறுகிறது.

மேலும், இத்தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவநீதம்பிள்ளை, சித்ரவதை தடுப்புச் சட்டம் 1984ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டதிலிருந்து இதுவரை 146 நாடுகள், அதாவது உலகின் நான்கில் மூன்று பகுதி நாடுகள், அதனை நடைமுறைப்படுத்தியுள்ளன என்று கூறினார்.

இன்னும் அதிக நாடுகள் இச்சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் நவநீதம்பிள்ளை கேட்டுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.