2009-06-22 14:58:26

புலம் பெயர்ந்த மக்களை ஏற்பது அனைவரின் கடமை, திருத்தந்தை.


சூன்22,2009. மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறக் காரணமாகும் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்த அதேவேளை, இந்தப் புலம் பெயர்ந்த மக்கள் வரவேற்கப்பட வேண்டியதன் கடமையையும் கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை.

புனித பாத்ரே பியோ திருத்தல வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஆற்றிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய அவர், துன்பம் நிறைந்த, சிலவேளைகளில் மிகுந்த வேதனையான சூழலில் வாழும் அகதிகளுக்காகச் செபிப்போம் என்றார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் சூன் 20, இச்சனிக்கிழமை உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, போர், அடக்குமுறைகள் இயற்கைப் பேரிடர்கள் ஆகிய சூழல்களால் பலர் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு உட்படுகிறார்கள். இவர்களை வரவேற்பதில் இன்னல்கள் இருந்தாலும் இவர்களை ஏற்பது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார்.

இந்த மக்களின் நெருக்கடியான இந்நிலை களையப்பட நம்மால் இயன்றதைச் செய்ய கடவுள் அருள்புரிவாராக என்றும் அவர் கூறினார்.

உலகில் போர் மற்றும் அடக்குமுறைகளால் தற்சமயம் ஏறத்தாழ ஒரு கோடியே 5 இலட்சம் அகதிகளும் 2 கோடியே 60 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளே புலம் பெயர்ந்தோரும் உள்ளனர் என்று அகதிகளுக்கான ஐ.நா. அவைத் தலைவர் அறிவித்தார்.

மேலும், இம்மாதம் 19ம் தேதி தொடங்கியுள்ள சர்வதேச குருக்கள் ஆண்டு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, திருச்சபை மற்றும் மூன்றாம் மில்லேனேயச் சமுதாயத்திற்கானக் குருக்களின் பணி மற்றும் புனிதத்துவத்தின் மதிப்பை உணர இவ்வாண்டு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.