2009-06-20 15:02:19

மியான்மார் எதிர்க்கட்சித் தலைவிக்கு விடுதலை வழங்கப்பட உலகளாவிய கிறிஸ்தவ தோழமை அமைப்பு வேண்டுகோள்


சூன்20,2009. மியான்மார் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சு கி க்கு விடுதலை வழங்கப்படவும் அந்நாட்டில் அனைத்து அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவும், கிழக்கு மியான்மாரில் அப்பாவி பொது மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவும் உலகளாவிய கிறிஸ்தவ தோழமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மியான்மாருக்கு எதிராக சர்வதேச ஆயுதத் தடை விதிக்கப்படவும் மியான்மார் இராணுவ அரசு மனித சமுதாயத்திற்கு எதிராகச் செய்த குற்றங்களை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படவும் அழைப்புவிடுத்த கிறிஸ்தவ தோழமை அமைப்பு, அந்நாட்டின் மீதான ஐ.நா.வின் பொறுப்புணர்வையும் சுட்டிக்காட்டியுள்ளது.

நொபெல் அமைதி விருது பெற்ற ஆங் சான் சு கியின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட சி.எஸ். டபுள்யு என்ற இவ்வமைப்பு, 13 ஆண்டுகளுக்கு மேலாக ஆங் சான் சு கி வீட்டுக்காவலில் இருப்பதையும் குறிப்பிட்டது.

ஆங் சான் சு கியின் தேசிய ஜனநாயக கட்சி, 1990ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 82 விழுக்காட்டு இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. எனினும் அவர் அரசு அமைக்க அனுமதிக்கப்படவில்லை.








All the contents on this site are copyrighted ©.