2009-06-20 14:58:26

குருக்களின் புனிதத்துவ வாழ்வுக்கு திருத்தந்தை அழைப்பு


சூன்20,2009. குருத்துவத் திருப்பணி, திருச்சபைக்கும் உலகுக்கும் இன்றியமையாதது என்று கூறிய அதேவேளை, அனைத்து குருக்களும் புனிதத்துவ வாழ்வு வாழ முயற்சிக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நேற்று மாலை கர்தினால்கள், ஆயர்கள், ஆயிரக்கணக்கான குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகளுடன் திருப்புகழ்மாலை செபித்து சர்வதேச குருக்கள் ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை இவ்வாறு அழைப்புவிடுத்தார்.

தூய வாழ்க்கை நடத்தும் குருக்களும் விசுவாசிகள் நம் ஆண்டவரின் இரக்கமுள்ள அன்பை அனுபவிக்க உதவுகின்ற மற்றும் அவ்வன்புக்கு உறுதியான சாட்சிகளாய் இருக்கின்ற திருப்பணியாளர்களும் திருச்சபைக்குத் தேவைப்படுகிறார்கள் என்றுரைத்தார் அவர்.

திருச்சபையின் மேய்ப்பர்களால் செய்யப்படும் பாவங்கள் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை மிகவும் துன்பப்படுத்துகின்றன என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, தங்களது தனிப்பட்ட கோட்பாடுகளால் மந்தையை தவறான பாதைக்கு இட்டுச் செல்வது அல்லது அவர்கள் அம்மந்தையை பாவம் மற்றும் மரணத்தின் சோதனைக்கு உட்படுத்துவது ஆகியவற்றால் தங்களையே மந்தையைத் திருடுகிறவர்களாக மாற்றுவது திருச்சபையை துன்பத்துக்கு உள்ளாக்கும் என்று எச்சரி்த்தார்.

இத்திருவழிபாட்டுக்கு முன்னர் புனித ஜான் மரிய வியான்னியின் புனிதப்பொருளின் முன்பாகவும் செபித்த திருத்தந்தை, இப்புனிதரின் இதயம் இறையன்பால் பற்றி எரிந்தது என்றும் மறையுரையில் கூறினார்.

குருக்கள், நல்ல மேய்யப்பர்களாகப் பணியாற்ற வேண்டுமெனில் இந்த அன்பை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

கிறிஸ்தவத்தின் முக்கிய சாரம் இயேசுவின் திருஇதயத்தில் காணப்படுகின்றது, இறைவனின் இந்த மீட்பளிக்கும் அன்பு, நாம் நம்மையே அன்பின் கொடையாக வழங்க அழைப்புவிடுக்கிறது என்றார் அவர்.

கடவுளின் இதயம் இரக்கத்தின் அதிர்வுகளைக் கொண்டுள்ளது, குருக்கள் தாங்கள் பணிவுடனும் அதிகாரத்துடனும் பணிசெய்ய திருநிலைபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒருபொழுதும் மறக்கக் கூடாது என்றார் திருத்தந்தை.

வத்திக்கானின் புள்ளி விபரங்களின்படி 2007ம் ஆண்டின் இறுதியில் உலகில் 4,08,024 குருக்கள் இருந்தனர். அண்மை ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும் அதிகரித்து வரும் கத்தோலிக்கரின் எண்ணிக்கையோடு ஒத்து வரவில்லை. 1977ல் 1830 கத்தோலிக்கருக்கு ஒரு குரு என்று இருந்த நிலை, 2007ல் அது 2810க்கு ஒருவர் என்று இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.