2009-06-19 16:34:09

மத்திய கிழக்குப் பகுதி்யின் அமைதிக்காகவும், ஈராக் கிறிஸ்தவர்களுக்காகவும் தான் தினமும் செபிப்பதாகக் கூறினார் திருத்தந்தை


சூன்19,2009. மத்திய கிழக்குப் பகுதி்யின் அமைதிக்காகக், குறிப்பாக மிகுதியாக அன்பு செய்யப்படும் ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களுக்காகத் தான் தினமும் தொடர்ந்து செபிப்பதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இன்று திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த சீரோ ரீதியின் அந்தியோக் புதிய பிதாப்பிதா இக்னாஸ் 3ம் யூசெப் யூனனின் தலைமையிலான சீரோ ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் மன்றப் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, மத்திய கிழக்குப் பகுதி்யின் மக்களின் துன்பங்களைத் தனது அன்றாடத் திருப்பலியில் ஆண்டவரிடம் சமர்ப்பித்து அவர்களுக்காகச் செபிப்பதாகக் கூறினார்.

இந்த ரீதி திருச்சபையின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் உரோம் திருச்சபையுடனான உறவு எப்பொழுதும் உறுதியாக இருந்து வந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஐக்கியம் தொடர்ந்து காக்கப்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

திருநற்கருணை, திருச்சபையின் ஐக்கியத்தின் ஊற்றாக எப்பொழுதும் இருக்கின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, திருச்சபையைக் கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளில் ஒன்றிப்பு, ஒப்புரவு, புரிந்து கொள்ளுதல் மன்னிப்பு ஆகியவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமாறும் அக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.

குருக்களின் ஆன்மீக வாழ்வு குறித்த தனது பெரும் கவலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்த அவர், அனைத்து குருக்களின் புனிதத்துவத்திற்காகச் செபிக்கும் நாள் மற்றும் இயேசுவின் திருஇதய விழாவன்று சர்வதேச குருக்கள் ஆண்டை தொடங்கி வைப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

புனித பவுல் ஆண்டு முடியும் கட்டத்தில் இவ்வாண்டு தொடங்குகிறது, இது அகிலத் திருச்சபைக்கும் நல்ல பலனைத் தருவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறினார். மரியாவோடு அப்போஸ்தலர் யோவான் திருச்சிலுவையின் அடியில் நின்றார், நமக்காக ஊடுருவப்பட்ட மற்றும் நமக்கு அருளை வழங்கும் கிறிஸ்துவை நோக்குவதற்காக இன்று நாமும் ஆன்மீகரீதியில் இச்சிலுவையை சுற்றிக் கூடியுள்ளோம் என்றும் திருத்தந்தை பேசினார்.

உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் இவ்வியாழனன்று அந்தியோக் பிதாப்பிதா நிகழ்த்திய திருப்பலி பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, பல்வேறு கிறிஸ்தவ மரபுகளில் திருநற்கருணை ஐக்கியத்தின் அடையாளமாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

மன்னிப்பு, ஒப்புரவு, ஒன்றிப்பு ஆகியவைகளின் மேன்மையைப் புரிந்து கொள்வதற்குத் திருநற்கருணை மிகவும் உதவியாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றித்துள்ள சீரோ ரீதி அந்தியோக் திருச்சபையின் தலைமைப்பீடம் லெபனன் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.