2009-06-17 15:59:49

பாலைவனங்களும் தரிசு நிலங்களும் ஏறத்தாழ நூறு கோடிப் பேரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன,ஐ.நா.பொதுச் செயலர்


சூன்17,2009. பாலைவனங்களும் தரிசு நிலங்களும் இப்பூமியின் மூன்றில் ஒரு பகுதியைப் பாதித்து, ஏறத்தாழ நூறு கோடிப் பேரின் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்று ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.

நிலங்கள் பாலைவனமாகி வருவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் இப்புதனன்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், நீண்ட கால வறட்சி, பஞ்சம், அதிகரித்து வரும் வறுமை ஆகியவை, பலருக்குத் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறுவதே ஒரே தீர்வாக இருப்பதற்குக் காரணமாகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே இரண்டு கோடியே நாற்பது இலட்சம் பேர் வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர், இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டிற்குள் இருபது கோடியாக உயரக்கூடும் என்றும் அச்செய்தி கூறுகிறது.

உலகின் விளைநிலங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி கடந்த நாற்பது ஆண்டுகளில் தரிசு நிலங்களாகி கைவிடப்பட்டுள்ளது, மேய்ச்சல் நிலங்களில் ஏறத்தாழ நான்கில் மூன்று பகுதி பாலைநிலமாக மாறுவதற்கான பல்வேறு அறிகுறிகள் தெரிகின்றன என்றும் ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.

வெப்பநிலை மாற்றம் இதற்கு முக்கிய காரணம் எனினும் வேளாண்மைத் தொழில் முறைகளும் நீர் வளங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் விதங்களும் கவனிக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர்.








All the contents on this site are copyrighted ©.