2009-06-17 15:56:57

அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வகுக்கப்படும் சட்டங்கள் மனிதனுக்குத் தொண்டு செய்வதாய் இருக்க வேண்டும், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் வலியுறுத்தல்


சூன்17,2009. அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வகுக்கப்படும் சட்டங்கள் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனுக்குத் தொண்டு செய்வதாய் இருப்பதற்கு மதங்கள் அரசுகளை வலியுறுத்துமாறு திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான் கேட்டுக் கொண்டார்.

வருகிற ஜூலையில் இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி8 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை முன்னிட்டு உரோமையில் நடத்தப்பட்ட பல்சமயக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார் கர்தினால் தவ்ரான்.

கத்தோலிக்க, பிரிந்த கிறிஸ்தவ சபைகள், யூத, இசுலாம், புத்தம் ஆகிய மதங்களின் மற்றும் ஜப்பானின் அமைதிக்கான மதங்களின் உலக அவைப் பிரதிநிதிகள் என எண்பதுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அடிப்படை மனித உரிமை மீறல்கள், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு, நோய்கள், தீர்க்கப்படாத மோதல்கள், ஆயுத வியாபாரம், உயர்மட்டத்தில் இடம்பெறும் ஊழல்கள் போன்றவை இவ்வுலகைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார்.

பொதுவான ஒருமைப்பாடு, இயற்கையையும் அதன் வளங்களையும் மதிக்கும் புதிய வாழ்க்கைமுறை, இன்றைய பிரச்சனையில் தனிப்பட்டவரின் ஈடுபாடு குறித்த மனசாட்சியின் பரிசோதனை ஆகியவை தேவை என்றும் கர்தினால் வலியுறுத்தினார். இன்று இப்பிரதிநிதிகள் இத்தாலிய அரசுத்தலைவரையும் சந்திக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.