2009-06-15 15:11:48

வறுமை வெற்றிக்கு ஒரு தடையா?


சூன்15,2009. சின்னத்திரை நடிகை ஒருவர் தனது வாழ்க்கையில் போட்ட எதிர் நீச்சல் பற்றி இந்த வாரப் பெண்கள் பற்றிய பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நடிகை, தன்னைவிட 26 வயது மூத்தவரை, அதுவும் ஏற்கெனவே விவாகரத்து செய்த ஒருவரை, தனது அப்பாவுடைய பேச்சைத் தட்ட முடியாமல் திருமணம் செய்தவர். இவரது குடும்ப வாழ்க்கை நான்கு குந்தைகளுடன் சீரும் சிறப்புமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அவரது கணவருக்கு வேலையில் தொடர்ந்து ஏற்பட்ட தோல்வியினால் குடும்பத்தை வறுமை கவ்விக் கொண்டது. அவருடைய முந்நூறு பவுன் நகையும்கூட அந்த ஏழ்மை 'வெள்ள'த்துல அடிச்சுட்டுப் போயிருக்கு. ஒரு கட்டத்தில், ஒண்ணுமே இல்லை என்ற அதிர்ச்சியில் கணவர் மாரடைப்பில் படுத்த படுக்கையாகிவிட்டார். அந்த நடிகைக்கோ 18 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வேண்டிய கட்டாயம். அதன்பின் கணவரும் இறந்தார். தனது வாழ்க்கைப் பற்றி அந்த நடிகை சொல்லும் போது, ''அதுக்குப் பிறகு வரிசையாக, துன்பம் மட்டுமே வரிசை கட்டி எங்கள் வீட்டு வாசலில் நிற்க ஆரம்பிச்சுச்சு. அந்த வேதனை தாங்காம, வேற மாதிரியான முடிவெல்லாம்கூட எடுக்க வேண்டி வந்தது. ''கடவுள் கஷ்டத்தைக் கொடுத்து, நமக்குத் தன்னை ஞாபகப்படுத்துவார்னு சொல்வாங்க. அப்படி எங்களுக்கும் ஞாபகப்படுத்தினார். எல்லாத்தையும் இழந்துட்டாலும் இந்த நிமிஷம் ஏதோ வாழ்க்கையில ஜெயிச்சுட்ட மாதிரி இருக்கு...'' என்று தனது போராட்ட வாழ்க்கையை நினைவு கூருகிறார். ஒளிப்பதிவுக் கருவியின் கண்களுக்குப் போலியாகப் புன்னகைத்து நகரும் இவரின் நிஜ வாழ்க்கை, இன்று மீண்டும் தன்னம்பிக்கை நிறைந்த நிஜப் புன்னகையோடு வென்றெடுத்து நிற்கிறது.

“தன்னம்பிக்கை உள்ளவரை எல்லா வாசல்களும் திறந்து வரவேற்கும்” என்று எமர்சென் சொன்னார். இன்று வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கும் பலரது வாழ்க்கை வறுமை எனும் காட்டாற்று வெள்ளத்தில் நீந்திய தன்னம்பிக்கை எதிர்நீச்சலாகவே இருக்கின்றது. கடந்த ஆண்டு பிரான்சில் உலகக் கோப்பை கேரம் விளையாட்டில் பெண்கள் பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற இளவழகியின் குடும்பமும் வறுமையில்தான் இருக்கின்றது. அவர்களது குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தபோதே அவர் கேரம் போட்டிகளில் உச்சக் கோடு தொட்டிருக்கிறார். அவரின் சென்னை “வீட்டுவாரிய” இல்லத்தில் நான்கு பேரோடு சேர்ந்து கேரம் போர்ட்கூட விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கிறது. 24 வயதான இளவழகியின் அப்பா கைவண்டி ஓட்டுனர். பிரான்சில் வென்ற உலகக் கோப்பைக்குப் பிறகு இளவழகி நிருபர்களுக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அதில், “நாங்கள் வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இருப்பதற்கு வீடும், விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் எனக்கு ஓர் அரசுப் பணியும்தான் என்னுடைய கோரிக்கை. ரிக்ஷா ஓட்டியான உன்னோட பொண்ணுக்கு கேரம்போர்டெல்லாம் தேவையா? பேசாம ஏதாவது வேலைக்கு அனுப்புறதைப் பார்ப்பியா…” என்று என் காதுபடவே, என் அப்பாவிடம் கிண்டல் தொனிக்கப் பேசியவர்கள் எத்தனையோ பேர். நான் ஒவ்வொரு முறையும் “சிவப்புக் காயை பாக்கெட் செய்துவிட்டு, அடுத்ததிற்குக் குறிபார்க்கும் போதெல்லாம், தொடர்ந்து எங்கள் குடும்பத்தைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும் வறுமைதான் என் நினைவுக்கு வருகிறது. வறுமையில் இருந்தாலும் என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் வெற்றி என்னை தொடருகிறது. இனிமேலும் தொடரும்! ” என்றார்.

சரியான சமயத்தில் சரியான முடிவெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தப்பான சமயத்தில் தப்பான முடிவு எடுக்காமல் இருப்பது என்று உணர்ந்ததாக வறுமையிலும் வெற்றிக் கொடி கட்டும் தன்னம்பிக்கை சாதனையாளர்கள் சொல்கிறார்கள். இந்த உலகில் தன்னம்பிக்கையில்லாத சாதனையாளர்கள் ஒருவர்கூட இருக்க முடியாது. உலக வல்லரசாகத் திகழ்ந்த இரஷ்யாவின் அதிபராக உயர்ந்த ஜோசப் ஸ்டாலின் சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்தான். ஸ்டாலின், தனது கடினமான உழைப்பால் உலக வல்லரசின் அதிபராக உயர்ந்தவர். இன்று நம்மில் பலரின் பொழுது போக்காக இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைக் கண்டுபிடித்த ஜான் பயர்டு என்பவர், தேங்காய் நாரை தலையில் வைத்து ஊர் ஊராய் வியாபாரம் செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தியவர். எல்லாத் தலைமுறைகளும் இரசிக்கும்படியாக காப்பியங்களைப் படைத்த ஆங்கிலேய நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் தந்தை, குதிரை லாயத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர்.

தனது தர்க்க, தத்துவ சிந்தனைகளால் தொழிலாளர் வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்த கருந்தாடி கார்ல் மாக்ஸ், சாகும்வரை எந்த நாட்டின் குடியுரிமையும் பெறாமல் இருந்தவர். பிறந்தது மாளிகை என்றாலும் வாழ்நாள் முழுவதும் குடிசையில் வாழ்ந்தவர். குடிக்கக் கூழ் இல்லையே என்று இவர் எண்ணியதே இல்லையாம். மாறாகப் பசியை வென்று எப்படி இலக்கை அடைவது என்பதுதான் இவரின் போராட்டமாக இருந்திருக்கிறது. பணம் நம்மை ஆளக்கூடாது, நாம்தான் பணத்தை ஆளவேண்டும் என்று சொன்ன இவர் தினமும் வறுமையின் தொட்டிலில்தான் தூங்கியிருக்கிறார். இவரது பெண் குழந்தை பிரான்சிஸ்கா இறந்த போது அவளை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கக் காசு இல்லாமல் மனம் வெதும்பியிருக்கிறார். அப்போது சொன்னாராம் : “இவள் பிறந்த போது இவளைத் தாலாட்ட தொட்டில் இல்லை, இவள் இறந்த போது என்னிடம் சவப்பெட்டி இல்லை” என்று. தனது மேல் சட்டையை கழற்றிக் கொடுத்து கடன்காரர்களின் இம்சையைப் போக்கியிருக்கிறார். தனது காலணிகளை விற்று ரொட்டி வாங்கி பிள்ளைகளின் பசியை அகற்றியிருக்கிறார். வறுமையினால் வாழ்வு இல்லை என்று அனுபவத்தால் உணர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்த போதும் தான் கொண்ட இலக்கில் இறுதிவரைப் போராடியவர் கார்ல் மாக்ஸ். கொடிய வறுமையிலும் போராடி வெற்றி பெற முடியும் என்று உலகிற்கு உணர்த்திய மேன்மக்களில் மாக்ஸ் தலைசிறந்தவர் என்று சொல்லலாம். மனைவியை இழந்தார். மகனையும் மகளையும் இழந்தார். ஆனால் வெற்றி பெறுவேன் என்ற இலக்கை மட்டும் இழக்கவில்லை. இதனால் உலகை வென்றார். இன்று உலகினர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி எதிர் கொள்ளப்படும் இக்காலத்தில், ஏழைகளும் பசியால் வாடுவோரும் என்றுமில்லாத அளவுக்கு மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் ஜொசெட்டெ ஷீரன் கடந்த வாரத்தில் எச்சரித்தார். உலகில் ஆறு பேருக்கு ஒருவர் வீதமும் பசியால் துன்புறுகின்றனர், ஆறு வினாடிகளுக்கு ஒரு குழந்தை வீதம் இறக்கின்றது, வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 1000த்துக்கு 91 குழந்தை வீதம் ஆண்டு தோறும் இறக்கின்றன, உலகின் 5 விழுக்காட்டு பணக்காரர் 86 விழுக்காட்டு வளங்களைப் பயன்படுத்துகின்றனர், உலகிலுள்ள 600 கோடிக்கு மேற்பட்ட மக்களில் ஏறத்தாழ 120 கோடிப் பேர் ஒருநாளைக்கு ஒருடாலர் ஊதியத்தில் வாழ்கின்றனர், மக்களின் பசிக்கொடுமை உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் ஷீரன் கூறியுள்ளார். திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், உலகில் நிலவும் பசி முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றார். நித்தியவாழ்வின் உணவாகிய கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்த விழா சிறப்பிக்கப்பட்ட ஞாயிறன்று பசியால் வாடும் இலட்சக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்பட இம்மாதத்தில் நடைபெறவுள்ள நியுயார்க் ஐ.நா.கூட்டம் ஆவன செய்யும் என்ற தமது நம்பிக்கையை தெரிவித்தார்.

RealAudioMP3 எனவே அன்பர்களே, உலகில் பசிக்கொடுமை அழியாத வடுவாக மாறிவருகிறது. ஆனாலும் வெற்றிகளை எட்டிய பலரது வாழ்க்கை ஏழ்மையில்தான் தொடங்கியுள்ளது. அவர்கள் சிகரங்களை அடைய வறுமை தடையாக இருக்கவில்லை. அவர்களும் அவ்வாறு உணரவில்லை. என்னிடம் பணம் இல்லையே, எவ்வாறு முன்னேறுவேன் என்று வாளாவிருக்கவில்லை. உள்ளத்தில் உறுதி இருந்தால் மடுவையும் மலையாக்கலாம். தமிழக்தில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளில் முதலிடம் வகித்த மாணவர்களுக்குப் ஊக்கப் பரிசுகளை வழங்கிய அதிகாரிகளும், திறமைகள் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கும், முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி நம்மைத் தேடி வரும் என்று இன்று சொல்லியுள்ளார்கள்.

ஒருமுறை நடந்து போய்க் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தரைக் குரங்குகள் துரத்தத் தொடங்கின. உடனே அவர் நடையை துரிதப்படுத்தினார். குரங்குகளும் தொடர்ந்து துரத்தின. ஒருகட்டத்தில் குரங்குகள் அவரை நெருங்கிவிட்டன. அப்பொழுது ஓடாதே, எதிர்த்துநில் என்று பின்புறமிருந்து ஒரு பெரியவர் குரல் கொடுத்தார். விவேகானந்தரும் வேகமாகத் திரும்பி எதிர்த்து நின்றார். உடனே குரங்குகள் வந்தவழியே திரும்பிப் போய்விட்டன.

நமக்கு வரும் பிரச்சனைகள்கூட இந்தக் குரங்குகள் போன்றவைதான். நாம் பயந்து ஓடத்தொடங்கினால் அவை நம்மைத் துரத்தும். எதிர்த்து நின்றால் ஓடிவிடும். வறுமை ஒரு மேகம் போன்றது. அது சூரியன் என்ற தைரியம் வந்ததும் சுருங்கி விடும். அன்பர்களே, நான் ஏழை என்று எண்ணுவதை முதலில் நிறுத்துவோம். வெற்றியைப் பொருத்தவரை எல்லாத் துன்பங்களும் நல்ல துன்பங்கள் என்று பெரியோர் சொல்கிறார்கள்.

 








All the contents on this site are copyrighted ©.