2009-06-13 15:07:14

அகதிகள் விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும், யாழ்ப்பாண ஆயர்


சூன்13,2009. இலங்கையின் போரினால் அகதிகளாகியுள்ள ஏறத்தாழ மூன்று இலட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமாக இருக்கும் வேளை அவர்கள் விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.

கண்ணிவெடிகள் அகற்றப்படல், வீடுகள் மீண்டும் கட்டப்படல், சீர்குலைந்த உள்கட்டமைப்பைச் சீர்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும் அகதிகளைத் தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் காலக்கெடுவை அரசு தள்ளிப்போடுவதற்குரிய காரணம் புரியவில்லை என்றும் ஆயர் தாமஸ் கூறினார்.

இந்தப் போர் அகதிகளுள் ஏறத்தாழ ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் அரசு அமைத்துள்ள ஆறு முகாம்களில் வாழ்வதாகவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இவர்களை, செஞ்சிலுவைச் சங்கம், காரித்தாஸ், மற்றும் ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர்கள் மட்டுமே மிகுந்த சிரமத்துக்கிடையில் சந்திக்க முடிகின்றது எனவும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

இதற்கிடையே, அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றிக் கருத்து தெரிவித்த இலங்கை புத்தமத தியான மைய தலைவரான புத்தமதகுரு தெரோ, நாங்கள் போரில் வெற்றி பெற்றுள்ளோம், எங்களின் சொந்தத் திட்டங்களின்படி செயல்படுவோம், இதில் வெளிநாட்டுத் திட்டங்களோ ஆலோசனைகளோ எங்களுக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.