2009-06-12 14:19:02

வழிபாடுகள் இதயத்தோடு ஒன்றியதாயும் மதிப்புடன் நடத்தப்படுவதாயும் இருக்க வேண்டும், திருத்தந்தை


சூன்12, 2009. திருச்சபையில் உலகப்போக்கு ஊடுருவது குறித்து எச்சரித்த அதேவேளை அது திருநற்கருணை வழிபாட்டை அர்த்தமற்றதாகவும் கடமைக்கெனச் செய்வதாகவும் மாற்றி வருகின்றதென கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இவ்வியாழன் மாலை உரோம் புனித இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, திருநற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னம் இருப்பதில் விசுவாசம் வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இக்காலத்தில் திருச்சபையிலும்கூட ஊடுருவியுள்ள உலகப்போக்கு, திருநற்கருணை பக்தி முயற்சியை, வாடிக்கையாக மற்றும் கடமைக்கெனச் செய்யப்படும் ஒன்றாக மாற்றக்கூடிய ஆபத்தை முன்வைக்கின்றது என்றுரைத்த அவர், இந்த வழிபாடுகள் இதயத்தோடு ஒன்றியதாயும் மதிப்புடன் நடத்தப்படுவதாயும் இருக்க வேண்டும் என்றார்.

செபத்தை மேலோட்டமாகவும் வேகமாகவும் செய்வதற்கான சோதனைகள் எப்பொழுதும் எழுகின்றன, இவை ஒருவரை இவ்வுலகக் கவலைகள் மற்றும் செயல்பாடுகளால் அடித்துச்செல்ல வாய்ப்பளிக்கக்கூடும் எனவும் திருத்தந்தை கூறினார்.

ன்று திருப்பலியில் நமக்கு வழங்கப்பட்ட திருநற்கருணை, புதிய உலகின் நித்திய வாழ்வின் அப்பம், எனவே நம்மில் தற்பொழுது வருங்கால உலகம் தொடங்குகின்றது என்றும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் உரைத்தார் பாப்பிறை.

எனவே திருநற்கருணையோடு விண்ணகம் மண்ணகத்திற்கு வருகிறது, காலம், இறைவனின் நித்தியத்தால் அணைக்கப்படுவது போல, கடவுளின் நாளைய தினம் இன்றைய தினத்தில் இறங்கி வந்துள்ளது என்றும் உரோம் ஆயரான திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்துவோடு நிலைத்திருந்து, நமக்கு அவரைக் கொடையாகக் கொடுக்கவும், நித்திய வாழ்வுக்கான அப்பத்தால் நாம் ஊட்டப்படவும், மனச்சான்றுகளைக் கறைப்படுத்தும் தீமையின் நஞ்சு, வன்முறை, வெறுப்பு ஆகியவற்றினின்று இவ்வுலகை விடுவிக்குமாறும் அவரின் இரக்கமுள்ள அன்பின் சக்தியால் தூய்மைப்படுத்துமாறும் அவரிடம் செபிப்போம் என்று இம்மறையுரையில் கூறினார் திருத்தந்தை

இத்திருப்பலியின் இறுதியில் இலாத்தரன் பசிலிக்காவிலிருந்து புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குத் திருத்தந்தையின் திருநற்கருணை பவனியும் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.