2009-06-09 18:21:36

செல்வரும் இலாசரும் பற்றிய உவமை . ஓர் விளக்கம் . 090609 .


விவிலியத்தேடல் நிகழ்ச்சியில் நாம் இன்று செல்வரும் இலாசரும் பற்றிய கதையை , உவமையைக் கேட்டோம் . ஓர் உண்மையை , கருத்தை வெளிப்படுத்த கதை வழியாக விளக்கிக்கூறுவதே ஓர் உவமை என நாமறிவோம் .

இந்தக் கதை மிகப் பெரிய மருத்துவர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்பவரின் வாழ்வில் பெரும் புரட்சியை உண்டுபண்ணியது . அவர் மனம் மாறி , அவர் எப்பொழுதுமே நல்ல கிறிஸ்தவர்தான் , ஆனால் மனம் மாறி ஆப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு மிக ஏழ்மையிலும் அறியாமையிலும் இருந்த மக்களுக்கு மருத்துவ மனையை நிறுவி , இலவசச் சிகிச்சை அளித்து வந்தார் . தம் வாழ்நாட்கள் முழுவதையும் அவர்களுக்காகவே செலவிட்டார் டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் .

இந்த உவமையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் நம் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும் நம்பிக்கை உள்ளது .

உவமையில் மூன்று பகுதிகள் உள்ளன . நாடகப்பாணியில் கதை அரங்கேற்றமாகிறது . முதல் பகுதியில் செல்வந்தர் மிக ஆடம்பர உடையில் காட்சிதருகிறார் . எப்பொழுதும் விருந்தும் கொண்டாட்டமும்தான் . லாசர் செல்வந்தரின் மேசையிலிருந்து குப்பையில் போடப்படும் ரொட்டித்துண்டுகளைப் பொறுக்கித் தின்கிறார் . அதைவிட்டால் அவருக்கு வேறு வழியில்லை . பட்டினியால் சாகவேண்டியதுதான் . நாய்கள் அவரது ரணமான புண்களைச் சுவைக்க வரும்போது அவற்றை விரட்டக்கூட அவருக்குச் சக்தியில்லை .



செல்வத்தைக் கொண்டிருப்பது பாவமல்ல . ஆனால் அது நம்மைத் தவறான வழிகளில் செல்ல சோதனைகளைத் தரும் . அச்சோதனைகளை வெல்வது மிகக் கடினம் . வறுமையை புண்ணியமாகக் கருதத் தேவையில்லை . ஆனால் அது நம்மைக் கடவுளை நம்பி வாழவும் கடவுளைப்பற்றி அடிக்கடி சிந்திக்கவும் அவரிடம் மன்றாடவும் நமக்குப் பாதை காட்டலாம் . ஆன்ம வளர்ச்சிக்கு அது வழித்துணையாக அமைய வாய்ப்பிருக்கிறது . கதையில் வரும் செல்வந்தர் லாசரைப் பற்றிக் கருதவில்லை . எனவே அவர் தண்டனைத் தீர்ப்பைப் பெறுகிறார் .



கதையின் அடுத்த பகுதியில் வானக மோட்சமும் , நரகமும் காட்டப்படுகின்றன . கதையில் செல்வந்தரும் ஏழை லாசரும் இறக்கின்றனர் . செல்வந்தர் அடக்கம் செய்யப்படுகிறார் . அந்நாட்களிலும் இந்நாட்களிலும் அடக்கம் செய்யப்படுவது மனித மாண்புக்கு மரியாதை அளிப்பதாகும் . அதனால்தான் அட்லாண்டிக்கடலில் வீழ்ந்து மூழ்கிய விமான விபத்தில் இறந்தவர்களுக்கு நல்லடக்கம் செய்வதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு 21 சடலங்கள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன . கதையில் செல்வந்தரின் செல்வாக்கு நல்லடக்கத்துக்கும் வழிசெய்கிறது . லாசரைப் பற்றி யார் நினைத்தார்கள் .

மறுவாழ்வில் செல்வந்தரின் நிலைமை தலைகீழாக மாறுகிறது . அவர் நரகத்துக்கு அனுப்பப்படுகிறார் . ஏழை லாசர் வானகத்தில் ஆபிரகாமின் மடியில் அமர்ந்திருக்கிறார் .

இப்பொழுதுதான் கதையில் உரையாடல் வருகிறது . லாசர் ரொட்டிக்காக ஏங்கியதுபோன்று செல்வந்தர் சொட்டு நீருக்காக ஏங்குகிறார் . செல்வந்தர் லாசரை யாசிப்பவராகவே இன்னும்கூடக் கருதுகிறார் . லாசரை அனுப்பும் எனக்கூறுகிறார் . ஆனால் ஆபிரகாம் இரண்டு காரணங்களுக்காக செல்வந்தரின் விண்ணப்பத்தை நிராகரிக்கிறார் . முதலாவதாக உலகிலேயே செல்வந்தர் இன்பங்களை அனுபவித்துவிட்டார் . அடுத்து இப்பொழுது மனந்திரும்பும் காலம் முடிந்துவிட்டது . தீர்ப்புக்குரிய காலம் உறுதியாகிவிட்டது .



கதையின் மூன்றாவது பகுதி திடீரென வருகிறது . செல்வந்தர் அவருடைய 5 சகோதரர்களையும் எச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறார் . அந்த விண்ணப்பம் அந்தச் செல்வந்தர் சரியாக எச்சரிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது . இறந்தோரிடமிருந்து ஒருவர் பூமிக்குச் சென்று எச்சரித்தால் மனம் மாற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார் செல்வந்தர் . ஆபிரகாம் அந்தச் சாக்குப்போக்கை ஏற்க மறுக்கிறார் . சுயநல வாதியை நரகத்திலிருந்து ஒருவர் சென்றாலும் மாற்றமுடியாது . செல்வந்தரின் சகோதரர்களுக்கு தானமளிப்பது பற்றித் தெரியும் , வாழ்க்கையில் மனிதாபிமானம் பற்றித் தெரியும் , மோசேயும் இறைவாக்கினர்களும் வாழும் ஒழுங்குமுறையை கற்பித்திருக்கிறார்கள் . ஆனால் செல்வந்தரின் சகோதரர்கள் அவைகளுக்குச் செவிமடுக்கவில்லை . எந்த அதிர்ச்சிகரமான செய்தியும் அவர்களை மனம்மாறச் செய்யமுடியாது . ஏரோது மன்னன் இயேசுவைப் பற்றி நன்கு கேள்விப்பட்டும் , திருமுழுக்கு யோவானின் அறிவுரையை , எச்சரிக்கையைக் கேள்வியுற்றும் மனம் மாறவில்லையே .

இந்த உவமை இறையியல் தத்துவம் , அல்லது கோட்பாடு அல்ல . இது ஒரு தெளிவான கதை . இது கற்பனைக்கதை என்றாலும் வாழ்வைப் பிரதிபலிக்கிறது . இவ்வுலக வாழ்வில் நாம் காணும் ஏற்றத் தாழ்வுகள் மறுவாழ்வில் சரிசெய்யப்படும் எனக் கதை கூறுகிறது . தாழ்த்தப்பட்டவர்கள் மறுவாழ்வில் உயர்த்தப்படுவார்கள் . யான் , என்னுடையது எனவே கவிதை பாடும் சுயநல வாழ்வு தண்டனைத் தீர்ப்புப் பெறக்கூடிய நிலை உள்ளது . இருவர் வாழ்வுக்குமிடையே வானகத்தில் மிகப்பெரிய பாதாளம் இருக்கிறது . இந்த உலகில் ஒருவர் சிறிய இன்பங்களைத் தேடித் திரிந்தால் சாவுக்குப் பிறகு நிலைவாழ்வில் இடம்பெறமுடியாது . ஏனென்றால் அவருக்கு உண்மையான வானக இன்பம் பற்றிய அக்கறையில்லை . இவ்வுலகில் ஒருவர் இரக்கமின்றி வாழ்ந்துவந்தால் அவர் பிறருக்கும் அவருக்குமிடையே பாதாளத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் . அவர் அதே காரணத்துக்காக கடவுளிடமிருந்து தம்மைப் பிரித்துக் கொள்கிறார் . ஏனெனில் கடவுள் அன்புமயமாக இருக்கிறார் .

இக்கதை என்ன கூறுகிறது . இந்த உலக வாழ்வு மறுவாழ்வை நமக்குப் பெற்றுத்தரும் . மறுவாழ்வுக்கு இந்த உலக வாழ்வே ஆதாரம் . ஒவ்வொரு நாளும் வானகத்துக்கோ பாதாள நரகத்துக்கோ நமக்கு வழிகாட்டுகின்றன . லாசரைக் கண்டும் காணாது போய்க்கொண்டிருந்த செல்வந்தர் நரகத்துக்குச் செல்லும் பாதையைத் தேர்ந்து கொண்டேயிருந்தார் . தம் துன்பத்தைப் பொறுமையோடு ஏற்றுக்கொண்ட லாசர் வானகப் பேரின்பத்துக்கு வழி அமைத்துக் கொண்டிருந்தார் .

வாழ்வில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் நம்முடைய மறுவாழ்வை நிர்ணயிக்கின்றன . இந்தக் கதையைத் தெரிந்துகொள்வதும் நம் மறுவாழ்வுக்கு வழிகாட்டுவதாகும் .








All the contents on this site are copyrighted ©.