2009-06-08 15:05:40

கடவுள் அன்பாக இருக்கிறார், அந்த அன்பு மட்டுமே வாழ்வின் வற்றாத, தூய்மையான, முடிவில்லாத நித்திய ஊற்றாக இருக்கின்றது, திருத்தந்தை


ஜூன்08, 2009. கடவுள் அன்பாக இருக்கிறார், அந்த அன்பு மட்டுமே வாழ்வின் வற்றாத, தூய்மையான, முடிவில்லாத நித்திய ஊற்றாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருத்தந்தையின் மூவேளை செப உரையைக் கேட்பதற்காக வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறத்தாழ இருபதாயிரம் விசுவாசிகளுக்கு மூவொரு கடவுள் பெருவிழா பற்றிய சிந்தனைகளை எடுத்துரைத்த போது இவ்வாறு கூறினார் அவர்.

நாம் அன்பு செய்யவும் அன்பு செய்யப்படவும் வாழ்கிறோம் என்ற காரணத்தால் அன்பு மட்டுமே நம்மை மகிழ்ச்சியாக வைக்கிறது என்ற திருத்தந்தை, இதுவே நாம் மூவொரு இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு உன்னதமான சான்று என்றும் விளக்கினார்.

கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட மூவொரு கடவுள் பற்றி நாம் தியானிக்கிறோம் என்ற அவர், கடவுள் தனிப்பட்ட மனிதனின் ஐக்கியத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட பருப்பொருளின் மூவொரு கடவுளிலும் அவர் அன்பாக இருக்கிறார் என்று கிறிஸ்து வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் கூறினார்.

மூவொரு கடவுள் புகழொளி நிறைந்த தனிமையில் வாழவில்லை, மாறாக இடைவிடாமல் வாழ்வைக் வழங்கி அதனைத் தொடர்புபடுத்தும் வாழ்வின் குறையாத ஊற்றிலும் வாழ்கிறார் என்றார் அவர்.

விண்கோள்கள், விண்மீன்கள், வானிலுள்ள பால்மண்டலம், அணுக்கள், உயிரணுக்கள், மூலக்கோட்பாட்டுக்கூறுகள் ஆகியவற்றை நோக்குவதன் மூலம் மூவொரு கடவுள் பற்றி ஒருவர் உணர முடியும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தூய மூவொரு கடவுளின் திருப்பெயர் உயிர்வாழும் ஒவ்வொன்றிலும் ஒருவிதத்தில் பதியப்பட்டுள்ளது, ஏனெனில் உயிர்வாழும் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது, இதன்மூலம் கடவுள் உறவு சுடர்விடுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

வருகிற வியாழனன்று சிறப்பிக்கப்படும் இயேசுவின் திருஉடல் திருஇரத்தத்தின் திருவிழா, அடுத்து ஜூன் 19ம் தேதி வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் இயேசுவின் திருஇதய விழாக்கள் பற்றியும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

வானக்தந்தையின் விருப்பத்திற்குப் பணிந்து தூய ஆவியின் வல்லமையால் திருமகனைக் கருத்தாங்கிய புனித கன்னிமரியா, தூய திரித்துவ பேருண்மையின் விசுவாசத்தில் நாம் வளர உதவுவாராக என்று செபித்து இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.