2009-06-06 19:53:00

மூவொரு கடவுள் பெருவிழா, மறையுரை . - 060609 .


தூய அகுஸ்தினாரைப்பற்றிய பழைய கதை ஒன்று , பல தடவை சொல்லப்பட்ட கதை ஒன்று இருக்கிறது . அகுஸ்தினார் ஒரு நாள் கடலோரம் நடந்து கொண்டிருந்தார் . கடவுள் எப்படி மூவவராக, ஒருவராக இருப்பார் என ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் . விடை தெரியாமல் புரிந்து கொள்ளமுடியாது திகைத்தார் . நடந்துகொண்டிருந்தபோது ஒரு சிறுவன் கடல் நீரை கையால் அள்ளி அள்ளி ஒரு குழிக்குள் ஊற்றிக்கொண்டிருந்தான் . தம்பி நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்டார் அகுஸ்தினார் . கடல் நீரை முழுவதும் அந்தக் குழிக்குள் ஊற்றப்போவதாகத் தெரிவித்தான் சிறுவன் . அது எவ்வாறு சாத்தியமாகும் எனக் கேட்டார் அகுஸ்தினார் . கடவுள் எப்படி மூன்று ஆளாக ஆனால் ஒரே கடவுளாக இருக்கமுடியும் என்பதைப் பற்றி நீர் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர் . உம்மால் அதை எப்படிக் கிரகிக்கமுடியும் , எப்படிப் புரிந்து கொள்ளமுடியும் எனக் கேட்டுவிட்டு திடீரென மறைந்துவிட்டான் சிறுவன் . அந்தச் சிறுவன் கடவுளால் அனுப்பப்பட்ட வானதூதர் என்பதை அகுஸ்தினார் புரிந்து கொண்டார் . எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே மூவொரு கடவுளைக் காணலாம் என அகுஸ்தினார் எழுதியுள்ளார் .



மூவொரு கடவுளின் திருவிழா திருச்சபையில் மிக முக்கியமான ஒரு திருவிழா . இந்த விழா 1334 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் தொடங்கப்பட்டது . வழிபாட்டு ஆண்டின் முதல் பாதிப்பகுதிக்கு முடிவாகவும் மறு பாதிப்பகுதிக்கு தொடக்கமாகவும் இந்த விழா அமைகிறது . நைசீயா -காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த விழா திருச்சபையின் அடித்தளமாக உள்ளது . தெய்வீகத் தன்மை கொண்ட மூவர் ஆளுமையில் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் . எரியும் திரி ஒன்றில் ஒளியுண்டு . வெப்பமுண்டு . மெழுகுதிரிக்குரிய அமைப்பும் உண்டு . அதேபோல மூவொரு கடவுள் மூன்று தன்மைகளைக் கொண்டிருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார் . ரோஜா ஒன்று சிவப்பாக , மணமுள்ளதாக , மலரின் அமைப்பைப் கொண்டதாக உள்ளது . தண்ணீர் திரவமாக , ஐஸ் கட்டியாக , நீராவியாக தனித் தன்மை கொண்டிருக்கிறது . இருப்பினும் திரவம் ஒன்றுதான் . அதேபோல ஒரே கடவுள் வெவ்வேறு ஆளாக இருக்கிறார் . கிறிஸ்தவ திருவிழாக்களான கிறிஸ்துமஸ் , திருக்காட்சித் திருவிழா , பெரிய வெள்ளி , உயிர்ப்புப் பெருவிழா , கிறிஸ்துவின் விண்ணேற்பு விழா , தூய ஆவியானவர் விழா எல்லாமே மூவொரு கடவுளின் திருச்சபைக் கொள்கையை அடித்தளமாகக் கொண்டுள்ளன . மூவொரு கடவுளின் பெயரால் திருமுழுக்குப் பெறுகிறோம் . மூவொரு கடவுளின் பெயரால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன . திருப்பலியும் மற்றும் திருமணம் , குருத்துவம் போன்ற எல்லா அருள் சாதனங்களும் மூவொரு கடவுள் பெயரால் நிறைவேற்றப்படுகின்றன . நாளும் திருச்சபையின் கோவில் மணிகள் மூன்று தடவை காலை , நண்பகல் , மாலையில் ஒலிக்கின்றன . அவை நம்மை மூவொரு கடவுளாகிய தந்தையிடமும் – அவர் நமக்கு வாழ்வளிப்பவர் , திருமகனார் இயேசுவிடமும் – நம்மை மீட்டவர் அவர்- தூய ஆவியாரிடமும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறவர் அவர் - நம்மை செபிக்குமாறு ஆலய மணி ஓசை நம்மைத் தூண்டுகின்றது . மூவொரு கடவுளின் ஒவ்வொரு தனி ஆளிடமும் , மூவொரு கடவுளிடமும் நாம் நாளும் செபிக்கிறோம் .



மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் கடவுள் வாழும் கோயில்கள் என்பதை மறந்துவிடக்கூடாது . நம் உடலை ஆலயமாகக் கருதும் நாம் அதை பாவ அழுக்குப் படாது தூயதாக வைத்துக் கொள்ளவேண்டும் . மனத்துக்கண் மாசில்லாது வாழ வேண்டும் . கருணையும் நீதியும் கொண்ட வாழ்வை வாழவேண்டும் . மற்ற மனிதரையும் கடவுள் வாழும் ஆலயமாகக் கருதவேண்டும் .

வாழ்வில் வரும் எண்ணிலாத பிரச்சனைகளை கடவுள் நம்மில் வாழ்கிறார் என்ற நம்பிக்கையோடு துணிவோடு எதிர் கொள்ளவேண்டும் . அந்த உறுதிதான் கிறிஸ்தவ மறைசாட்சியர்கள் கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரையே தானமாகத் தர மனத்துணிவைத் தந்தது .



கடவுள் தன்மை கொண்ட மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக அன்புற்று வாழ்வது போன்று நாமும் நம் குடும்பங்களில் அன்புடன் வாழ வேண்டும் . பாசமும் பரிவும் மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்கவேண்டும் . அன்புற்று ஒன்று பட்டு ஓர் உயிரும் ஓர் உடலுமாக நாம் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் . மூவொரு கடவுள் நம் குடும்ப வாழ்வின் ஒற்றுமைக்கு மாதிரி . நம் குடும்பத்திலும் மற்றனைவரோடும் நாம் பாசத்தோடு பழகி வாழ வேண்டும் .

கடவுள் என்னும் அச்சில் உருவாக்கப்பட்ட நாம் , நம்முடைய உறவுகளில் நாமும் கடவுளும் பிறரும் இணைந்த குடும்பமாக வாழவேண்டும் . தந்தையாகிய கடவுளைப் போல நாமும் நம் குடும்பத்தை , சமுதாயத்தை , நாட்டை , உலகையே கட்டி எழுப்பவேண்டும் . திருமகனாக இருக்கும் இயேசுவைப்போல நாம் மன்னிப்பு வழங்கி சமாதானத்தை ஆறாக ஓட விடவேண்டும் . நொறுங்கிய உள்ளங்களில் சாந்தத்தையும் மகிழ்ச்சியையும் நாம் பரிமாறவேண்டும் . தூய ஆவியானவரைப்போல் நாம் உண்மைக்குச் சான்றாக , அறியாமை இருளை நீக்க முன்வரவேண்டும்.



புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் கூறுகிறார் – உலகம் பருப்பொருள் , இடம் , காலம் ஆகியவற்றால் ஆனது . இவை மூன்றும் இல்லையேல் , ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை . அதே போல மூவொரு கடவுளும் இருப்பது அவசியமாகிறது என்கிறார் அவர் . இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன .

பருப்பொருள் என்பது திடமானது , சக்தியுடையது , நகர்தலையுடையது .

இடம் என்பது நீளம் , உயரம் , அகலத்தைக் கொண்டது . காலம் என்பது இறந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலத்தைக் கொண்டது. இவை மூன்றில் ஒன்றாக இருக்கின்றன .

தமிழ் மண்ணில் கிறிஸ்துவின் விசுவாசத் தீபம் ஏற்றிய தூய சவேரியாருக்குப் பிடித்தமான செபம் மூவொரு கடவுளது செபமாகும் . அந்த செபத்தை நாமும் செபிப்போம் .

என்னில் வாழும் தந்தையே நான் உம்மை போற்றுகிறேன் . வணங்குகிறேன் . ஆராதிக்கிறேன் . அன்பு செய்கிறேன் . திருமகனாகிய இயேசு தூய ஆவியார் வழியாக நம்மைத் தந்தையாகிய கடவுளிடம் அழைத்துச் செல்வாராக .








All the contents on this site are copyrighted ©.