2009-06-06 15:26:42

குருக்கள் ஒழுக்கநெறிகளை மீறும்போது அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்கென குருக்கள் பேராயத்தில் ஒரு துறை


ஜூன்06,2009 கடும் துர்மாதிரிகை வருவிக்கும் மற்றும் பொதுநலத்தைப் பாதிக்கும் வகையில் குருக்கள் ஒழுக்கநெறிகளை மீறும்போது அந்த நிலைமைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்கெனத் திருப்பீட குருக்கள் பேராயத்தைத் திருத்தந்தை விரிவுபடுத்தியுள்ளார் என்றும் பேராயர் பியாசென்சா கூறினார்.

திருமணம் செய்ய முயற்சித்த அல்லது ஆறாவது கட்டளைக்கு எதிராகக் கடும் பாவங்கள் செய்த குருக்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கென திருப்பீட குருக்கள் பேராயத்தில் தற்சமயம் ஒரு துறை இருப்பதாக அவர் கூறினார்.

வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இதனை அறிவித்த பேராயர், இத்தண்டனையானது தற்போதை திருச்சபை சட்டத்தோடு ஒத்திணங்கிச் செல்வதாக இருக்கும் என்றும் கூறினார்.

தவறு செய்தவர் தனது வாழ்க்கையை திருத்திக் கொள்வதற்கு எண்ணம் இல்லாத போது அவரைக் குருத்துவ நிலையிலிருந்து அகற்றுவது உட்பட நிரந்தரமான தண்டனைகள் வழங்கப்படும் என்றார் பேராயர்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தனது குருத்துவத் திருப்பணியை கைவிட்டவர்கள் மற்றும் இத்திருப்பணியிலிருந்து சட்டத்துக்குப் புறம்பே விலகியிருப்பவர்கள், இந்தச் சுதந்திரமான நிலையை விடாப்பிடியாய்த் தொடர்ந்து இருப்பவர்கள் குருத்துவ நிலையிலை இழக்கிறார்கள் என்று இத்திருப்பீடத்துறை அறிவிக்கும் என்றும் குருக்கள் பேராயச் செயலர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.