2009-06-02 15:11:20

யாழ்ப்பாண மறைமாவட்டம் அழிக்கப்பட்டுள்ளது, ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் கவலை


ஜூன்02, 2009. அண்மையில் இலங்கை அரசு துருப்புகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே இடம் பெற்ற மோதல்களில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பல பங்குத் தளங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அறிவித்துள்ளார்.

எய்டு டு த ச்ர்ச் ன் நீட் என்ற ஜெர்மன் பிறரன்பு அமைப்பிற்கு எழுதிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாண ஆயர், உள்நாட்டுப் போர்க் காலத்தின் போது தனது மறைமாவட்ட குருக்கள் மக்களிடையே கடைசி நேரம் வரை இருந்ததாகவும் அதில் மரியம்பிள்ளை சரத்ஜீவன் என்ற குரு மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கென மக்கள் குடிபெயர்ந்த வேளையில் மொத்தம் இருபதாயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம், நாற்பதாயிரம் பேர்வரை காயமடைந்திருக்கலாம் எனவும் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் குறிப்பிட்டார்.

மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதற்கு போரிட்ட இருதரப்பினரும் காரணம் எனக்குற்றஞ்சாட்டிய ஆயர், இறுதிநேர இழப்புகளுக்கும் பெருந்துன்பங்களுக்கும் அதிபர் ராஜபக்ஷே நடத்திய இறுதிநேர கடுந்தாக்குதல்களே காரணம் எனவும் உரைத்தார்.

தற்போது இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக இருப்பதாகவும் ஆயர் கவலையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.