2009-06-01 14:19:08

திருத்தந்தை : தூயஆவி அன்பின் நெருப்பு, காற்றைச் சுத்தப்படுத்தும் புயல் மற்றும் அவர் பயத்தை வெற்றி கொள்கிறார்


ஜூன்01,2009. இன்னும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பெந்தகோஸ்து பெருவிழா திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, தூயஆவி அன்பின் நெருப்பு, காற்றைச் சுத்தப்படுத்தும் புயல் மற்றும் அவர் பயத்தை வெற்றி கொள்கிறார் என்று கூறினார்.

எல்லாத் திருவழிபாட்டு விழாக்களிலும் பெந்தகோஸ்து அதன் முக்கியத்துவத்தால் தனித்து நிற்கின்றது, காரணம் கிறிஸ்து தமது இவ்வுலகப் பணியின் நோக்கத்தை அறிவித்ததை இவ்விழா உண்மையாக்குகிறது என்றார் அவர்.

மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கிறிஸ்து கூறினார், தூயஆவியே அவர் கொண்டுவந்த நெருப்பு என்று விளக்கினார் திருத்தந்தை.

தூயஆவியைச் சந்திப்பதற்கும் இந்தத் தீயைப் பெறுவதற்குமான சாதாரண பாதை திருச்சபை என்றுரைத்த திருத்தந்தை, அதனைப் பெறுவதற்கு சீடர்களைப் போலக் கிறிஸ்தவர்கள் செபத்தில் நிலைத்திருக்கு வேண்டும் என்றார்.

நமது உயிர் வாழ்க்கைக்கு காற்று இருப்பது போன்று தூயஆவி நமது ஆன்மீக வாழ்வுக்கைக்கு இருக்கிறார் என்றும் வளிமண்டல மாசுக்கேடு, சுற்றுச் சூழலையும் நமது உறுப்புக்களையும் பாழ்படுத்துவது போன்று நமது இதயம் மற்றும் ஆவியின் மாசுக்கேடு, ஆன்மீக வாழ்வை பாழ்படுத்துகின்றது என்றும் பாப்பிறை கூறினார்.

காற்றை மாசுபடுத்த நம்மை நாம் பழக்கப்படுத்துபவர்களாக இருக்கக் கூடாது அதேவேளை, நம் ஆவியைக் கறைப்படுத்தும் கூறுகள் மட்டிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் திருத்தந்தை.

எடுத்துக்காட்டுக்கு புலன்இன்பத்தின் கண்ணாடியை அமைக்கும் உருவங்கள், வன்முறை, ஆண்களையும் பெண்களையும் ஒழுக்கத்தில் இழிவுபடுத்தும் செயல்கள் எனக் குறிப்பிட்டு, சுதந்திரம் என்று சொல்லப்படும் இவைகள் ஆன்மாவை, குறிப்பாக இளைய தலைமுறைகளை மதிமயங்கச் செய்து வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தில் கொண்டு போய் முடிக்கின்றன என்றார் அவர்.

பெந்தகோஸ்து விழாவன்று வீசிய கொடுங்காற்று என்ற உருவகம், உடல்ரீதியாக நாம் நுரையீரலாலும் ஆன்மீக ரீதியாக நமது இதயத்தாலும், அன்பு என்ற ஆவியின் ஆரோக்யமான சுத்தமான காற்றை சுவாசிப்பது எவ்வளவு விலைமதிப்பில்லா பொருள் என்பதை நாம் நினைக்க வைக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.

இக்காலத்தில் மனிதன் கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் இருப்பதற்கு விரும்புவதில்லை, ஆனால் அவன் தன்னையே தனித்த, சுதந்திரமான மற்றும் வயதுவந்தவனாக அறிவிக்கிறான், இத்தகைய மனித சமுதாயத்தின் கரங்களில் தீயும் அதன் அளவற்ற சக்தியும் ஆபத்தானவையாக மாறுகின்றன, வரலாறு நமக்குச் சொல்லியிருப்பது போல அவை மனித வாழ்வுக்கும் மனித சமுதாயத்திற்கும் எதிரானதாக மாறுகின்றன, ஹிரோஷிமா நாகசாகியிக்கு நேர்ந்த துயரங்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றன, போருக்காகப் பயன்படுத்தப்பட்ட அணுசக்தி இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு இறப்புக்களை விதைத்தது என்றார் திருத்தந்தை

இறுதியாக, தூயஆவி அன்பின் நெருப்பு, காற்றைச் சுத்தப்படுத்தும் புயல் மற்றும் அவர் பயத்தை வெற்றி கொள்கிறார் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.