2009-05-29 17:28:44

வத்திக்கானின் புதிய அரசுத் தூதர்களை வரவேற்றார் திருத்தந்தை.2905 .


வத்திக்கான் திருப்பீடத்துக்கான புதிய அரசுத் தூதர்களை வரவேற்றுப்பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இந்தியா , மங்கோலியா , பெனின் குடியரசு , நியூசிலாந்து , தென் ஆப்பிரிக்கக் குடியரசு , புர்க்கினா பாசோ , நபீமியா , மற்றும் நார்வே நாடுகளின் வத்திக்கானுக்கான புதிய தூதர்கள் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழ் பத்திரங்களைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தனர் . அவர்கள் அனைவரையும் திருத்தந்தை வாஞ்சையோடு வரவேற்று உரை நிகழ்த்தினார்.



செல்வி சித்ரா நாராயணனனை இந்திய அரசு புதிய வத்திக்கான் தூதராக நியமித்துள்ளது . இந்திய அரசின் சார்பாகவும் இந்திய மக்களின் சார்பாகவும் செல்வி சித்ரா நாராயணன் திருத்தந்தைக்கு பாசமிகு வாழ்த்துக்களை வழங்கினார் . அவருக்குப் பதில் அளித்த திருத்தந்தை இந்தியக்குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பட்டேலுக்கும் , புதிதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் தம் அன்பு நிறைந்த வாழ்த்துக்களை திருத்தந்தை வழங்கினார் . இந்தியா பழம் பெரும் ஞானத்தைக் கொண்ட வளமான நாடு என்றார் திருத்தந்தை. பல்வேறு மொழி , கலாச்சாரம் , மதங்களைக் கொண்ட இந்திய மக்கள் நேர்மையாகவும் , ஒன்றுபட்டும் வாழ்வதைத் திருத்தந்தை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார் . தத்துவங்களிடையேயும் , மதங்களிடையேயும் , வாழ்வின் ஆழமான சித்தாந்தங்களை கலந்துபேசி ஆராய்வதற்குப் மிகப் பெரிய வாய்ப்பிருப்பதாக திருத்தந்தை கூறினார் .

பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி உறுதியோடு வளர்ந்து வரும் இந்தியா மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை. வளரும் பொருளாதாரம் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க மறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார் .

மனித மாண்பைக் காப்பாற்றி , லஞ்சம் , ஏமாற்றுதல் , ஒரு சில பிரிவினருக்குச மட்டும் சார்பாகச் செயல்படுதல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறும் திருத்தந்தை ஆலோசனை வழங்கினார் .

அண்மையில் தேர்தலை மிகச் சிறப்பாக நடத்திய இந்தியக்குடியரசு மக்களாட்சியை மாண்போடும் , அமைதியாகவும் நடத்தமுடியும் எனக் காட்டியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார் . உலக நாடுகள் அனைத்துமே மதச் சுதந்திரத்தைக் காக்கவேண்டும் எனவும் தெரிவித்த திருத்தந்தை கிறிஸ்தவர்கள் இந்தியாவின் சில பகுதிகளில் தாக்கப்பட்டதை நினைவுகூர்ந்து கவலை வெளியிட்டார் . இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு ஆவன செய்ய உள்ளதைப் பாராட்டினார் . வெறுப்புணர்வுகளையும் வன்முறைகளையும் தவிர்த்து மனித மாண்பைக் காக்குமாறு வேண்டிக்கொண்டார் . கத்தோலிக்கத் திருச்சபை தொடர்ந்து கல்வி , நீதி , மற்றும் பிறரன்புப் பணிகளில் தம் சேவைகளைத் தொடரும் எனக்கூறி செல்வி சித்ரா நாராயணனுக்கும் , இந்திய நாட்டின் தலைவர்கள் , மற்றும் குடிமக்களுக்கும் இறையருளை வேண்டி தம் ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.