2009-05-27 15:06:29

விசுவாசத்திற்கும் பகுத்தறிவாதத்திற்கும் இடையே அடிப்படையான உரையாடலை இருக்கின்றதென்பதை கலிலேயோ பற்றிய கருத்தரங்கு நிரூபிப்பதற்கு உதவ முடியும், பிளாரன்ஸ் பேராயர்


மே27,2009. விசுவாசத்திற்கும் பகுத்தறிவாதத்திற்கும் இடையே அடிப்படையான உரையாடலை இருக்கின்றதென்பதை கலிலேயோ பற்றிய சர்வதேச கருத்தரங்கு நிரூபிப்பதற்கு உதவ முடியும் என்று இத்தாலிய தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கூறினார்.

இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கலிலேயோ பற்றிய சர்வதேச கருத்தரங்கில் திருச்சபையும் கலிலேயோவும் என்ற தலைப்பில் உரையாற்றிய பிளாரன்ஸ் பேராயர் ஜூசப்பே பெத்தோரி இவ்வாறு கூறினார்.

விசுவாசம், பகுத்தறிவாதத்தைப் புறக்கணிப்பதன் மூலம் வளராது, மாறாக விசுவாசமும் பகுத்தறிவாதமும் நல்ல ஒரு சூழலில் ஒன்றிணைவதன் வழியாக விசுவாசம் ஆழப்படும் என்றும் பிளாரன்ஸ் பேராயர் கூறினார்.

சர்வதேச வானியல் ஆண்டின் ஒரு பகுதியாக ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் இயேசு சபையினரின் நெய்ல்ஸ் நிறுவனம் பிளாரன்ஸ் நகரின் திருச்சிலுவை பசிலிக்காவில் இத்திங்களன்று தொடங்கிய இக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவும் கலந்து கொண்டார்.

வருகிற சனிக்கிழமை நிறைவு பெறும் இதில் திருப்பீட அறிவியல் துறை, கலாச்சாரத் துறை, வத்திக்கான் வானியல் ஆய்வகம் உட்பட 18 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பிளாரன்ஸ் நகரின் திருச்சிலுவை பசிலிக்காவில் கலிலேயோவின் கல்லறை இருக்கின்றது. அவர் கடைசியாக வாழ்ந்த வீட்டில் இக்கருத்தரங்கு நிறைவு பெறும்.








All the contents on this site are copyrighted ©.