2009-05-27 15:11:52

புதன் பொது மறைபோதகம் – புனித தெயதோர்


மே27,2009. மத்திய பைசான்டைன் காலத்தைச் சேர்ந்த புனித தெயதோரின் வாழ்வு மற்றும் படிப்பினைகள் குறித்து இன்றைய மறைபோதகத்தில் காண்போம் என்று மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

759ம் ஆண்டு ஒருபக்தி நிறை உயர் குடும்பத்தில் பிறந்த தெயதோர் தனது 22ம் வயதில் துறவுமடத்தில் நுழைந்தார். இவர் திருவுருவங்களையும் அடையாளங்களையும் எதிர்த்த அன்றைய இயக்கத்திற்கு எதிராகத் தன் குரலை எழுப்பினார். இயேசுவின் திருவுருவத்தை நம் பார்வையிலிருந்து அகற்றுவது என்பது அவரின் மீட்புப் பணியையே மறுத்து ஒதுக்குவதாகும் என்றார் புனிதர். அதுமட்டுமல்ல, துறவு வாழ்வின் ஆன்மீக, நிர்வாக மற்றும் ஒழுங்கமைவுக் கூறுகளை முழுமையாகச் சீரமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார் இவர். தான் செய்யும் பணியை அன்பு செய்வது என்பது இவரைப் பொறுத்தவரையில் ஓர் உயரிய புண்ணியமாக இவரால் கருதப்பட்டது. ஏனெனில் செய்யும் பணியை அன்பு செய்வது என்பது அவரின் ஆன்மீகக் கடமைகளின் மீதான ஆர்வத்தை, விருப்பத்தைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது என நம்பினார். செய்யும் பணியை ஒருவிதமான திருவழிபாடு என்றே அவர் விவரித்தார். ஏனெனில் அப்பணி மூலம் கிட்டுவது ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். அவர் வகுத்த கோட்பாடுகள் இன்றும் நமக்கு உதவுபவைகளாக உள்ளன. ஏனெனில் அவை விசுவாச ஐக்கியத்தையும் ஆன்மீகத்தில் தனித்தனியாக பிரிந்து செயல்படுவதற்கான ஆபத்தைத் தடுப்பதற்கான தேவையையும் வலியுறுத்தி நிற்கின்றன. நம் ஒழுங்கான வாழ்வு மூலமும் தூய ஆவியில் ஒருவர் மற்றவருடனான இணக்க உறவை வளர்ப்பதன் மூலமும் இயேசுவின் மறையுடலின் ஐக்கியத்தை உரமூட்டி வளர்க்க புனித தெயதோரின் அழைப்புக்கு நாம் செவிமடுப்போம் என மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.