2009-05-26 16:21:57

நம்பிக்கைக்குரிய பணியாளர் உவமை மத். 24,45 – 51 . 260509 .


நம்பிக்கைக்குரிய பணியாளர் வேளாவேளைக்குச் சரியான நேரத்தில் உணவைத் தயாரித்துத் தருகிறார் . இந்தக் கதை அந்நாட்களில் வாழ்ந்த சீடர்களுக்கோ , மற்றனைவருக்குமோ எழுதப்பட்டுள்ளது . உணவு வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது . நம் அயலார் நலமுற வாழ நாம் உதவ வேண்டும் .

நல்ல பணியாளர் பிரமாணிக்கமாக இருக்கிறார் . சாதுரியமாக இருக்கிறார் . அவரது தலைவரது வருகையை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார் . பிரமாணிக்கமானவர் என்பது அவருடைய கொள்கையில் தவறாதவராக இருப்பார் . இங்கு அவரது கொள்கை என்பது இறைப்பற்றிலும் , பிறரன்பிலும் என அர்த்தமாகும் . அறிவாளியாக உள்ள வர் என்பதற்கு தன்னுடைய தீர்க்கமான கணிப்பிலும் , எதிர் நோக்கலிலும் நம்பிக்கைக்குரிய முறையில் நடந்துகொள்பவர் . தலைவருடைய வருகைக்குத் தயாராக இருப்பவர் . இறையரசு வருவதற்கு காலம் தாழ்த்துவது போலத் தெரிந்தாலும் தம் கடமையில் தவறாதவர் . இவ்வாறு அந்தப் பணியாளர் எப்பொழுதும் தம் தலைவர் வருகையை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார் . தலைவர் வெளியே சென்றுள்ளதால் அவர் வீட்டில் இல்லாதிருத்தல் ஆர்வத்தை அதிகரிக்கிறது . தலைவர் இனி வரப்போவதில்லை என்றெண்ணிக்கொண்டு தம் விருப்பப்படி வாழ்பவர் தலைவர் வரும்போது தண்டிக்கப்படுவார் . ஆம் நினையாத நேரத்தில் நம் வாழ்வு முத்தாய்ப்புப் பெறும் .

இந்த நாட்டுப்புறக் கதை ஒரு கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது . இங்கு பணியாளர் என்பது இயேசுவின் சீடரைக்குறிக்கிறது . யாரிடமெல்லாம் ஏதேனும் பணியோ , பொறுப்போ கடமையோ ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அவர் பிரமாணிக்கமாகத் தம் கடமையைச் செய்ய வேண்டும் . தம் பணிக்குரிய கணக்கை சரியான முறையில் ஒப்படைக்கத் தயாராக இருக்கவேண்டும் . எல்லாக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்து கற்றுத்தந்த நல்ல வாழ்க்கைத் தத்துவங்களைப் பின்பற்றி மற்றவர்களையும் நல்வழிப்பாதையில் நடத்த முன் மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருத்தல் வேண்டும் என்பது இந்த உவமையால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது .



ஆண்டவர் இயேசு மீண்டும் வருவார் , நம் வாழ்வு திடீரென ஒரு நாள் முடிவுறும் , அதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்ற கருத்தையும் இக்கதை வலியுறுத்திக் கூறுகிறது . எப்பொழுது சாவு வரும் என்பது நமக்குத் தெரியாததால் நாம் எப்போதும் சாவுக்குப்பின் கடவுளைச் சந்திக்க நம் வாழ்வுக்கான கணக்கைக் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும் . தலைவர் பணியாளர்களை நம்பிக்கையோடு விட்டுவிட்டு திரும்பி வந்து கணக்குக் கேட்பார் என்ற கருத்து நற்செய்தி நூலில் பல இடங்களில் காணப்படுகிறது . நாம் எப்போதும் நம்பிக்கைக்குரிய முறையில் நடந்து கொள்ளவேண்டும் . நம்முடைய செயல்கள் நல்லவையோ தீயவையோ வாழ்ந்து கொண்டிருக்கும் இப்போதும் சரி ,வாழ்வின் முடிவிலும் சரி , தக்க சன்மானத்துக்கோ , தண்டனைத் தீர்ப்புக்கோ உரியவை . நம் வாழ்வுக்கு நாம் பொறுப்புள்ள முறையில் கணக்குக் காட்டவேண்டும் என்பது இந்தக் கதைவழியாகத் தெளிவுபடுத்தப்படுகிறது . நாம் சிறு காரியங்களிலும் நம்பிக்கைக்குரிய முறையில் நடந்து கொள்ளவேண்டும் ஏனென்றால் சிறு காரியங்கள் என்றே ஏதும் இல்லை . நாம் புரியும் செயல்கள் அனைத்துமே முக்கியமானவை . சிறு காரியங்கள் என்றெதுவுமே இல்லை . கடவுள் நம்மைப் பார்க்கவில்லை என எண்ணிவிடக்கூடாது . அவர் எப்போதுமே நம்மோடு இருக்கிறார் .

ஒவ்வொரு நாளும் மனிதன் வாழ்வின் எல்லைக் கோட்டில் நிற்கிறான் . அக்கரையில் முடிவில்லாத பேரின்ப வாழ்வா , முடிவில்லாத பேரழிவா என்பது நாம் வாழும் வாழ்வைப் பொறுத்தது . நாம் எப்போதும் இறைவனின் தீர்ப்புக்குத் தயாராக இருத்தல் வேண்டும் . ஏனென்றால் நாம் ஒவ்வொரு நாளுமே நமக்கு நாமே தீர்ப்பிடும் முறையில்தான் வாழ்ந்து வருகிறோம் . நாம் முடிவில்லாத பேரின்ப வான் வீட்டை அடையும் வண்ணம் வாழ்தல் வேண்டும் . ஏனென்றால் அதை நாம் வாழ்க்கை முறையால் எளிதாக பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது . இதுதான் மனித வாழ்வின் போராட்டமாகும் . வெற்றிக்கனி நமதாக இருந்தாலும் ஏனோ பாவ வழிகள் நம்மை ஈர்த்து அழிவுப்பாதைக்கு வழிகாட்டுகின்றன . எத்தனையை மேடு பள்ளம் வழியிலே நம்மை இடறவைத்துத் தள்ளப்பார்க்கும் குழியிலே . அத்தனையையும் தாண்டி நம் வாழ்வை இறைவனுக்கு ஏற்புடைய முறையில் எந்நேரமும் கடவுள் கணக்குக் கேட்பார் , நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு வாழ்வோமா .








All the contents on this site are copyrighted ©.