2009-05-25 14:32:31

சீன கத்தோலிக்கருக்கான தமது ஆதரவையும் பாசத்தையும் செபத்தையும் உறுதிப்படுத்தினார் திருத்தந்தை


மே25,2009. சீன கத்தோலிக்கருக்கான தமது ஆதரவையும் பாசத்தையும் செபத்தையும் உறுதிப்படுத்திய அதேவேளை, அம்மக்கள் கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும் பேதுருவின் வழித்தோன்றலோடு ஒன்றித்திருக்கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

சீனாவின் ஷேஷன் ஷங்கை திருத்தலம் அர்ப்பணிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் சகாயியான அன்னையின் விழா மே 24ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது, இந்நாளில் சீனத் திருச்சபைக்கான உலக செபநாள் கடைபிடிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

புனித பெனடிக்ட் நிறுவிய முதல் துறவு மடம் இருக்கின்ற மொந்தே கசினோவுக்கு இஞ்ஞாயிறு ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்டு நண்பகல் அல்லேலூயா வாழ்தெதொலி செபத்தைச் செபிக்குமுன்னர் ஆற்றிய சிறிய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

நமது பொது செபம் தூய ஆவியின் கொடைகள் பரவுவதற்கு உதவட்டும், இதன்மூலம் கிறிஸ்தவர்களுக்கிடையே ஒன்றிப்பு ஏற்படும் மற்றும் கத்தோலிக்கமும் திருச்சபையின் உலகளாவிய தன்மையும் இன்னும் அதிகமாகக் காணக்கூடியதாய் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்தவ சமூகமும் உலகம் முழுமையும் கிறிஸ்துவின் அமைதியின் வளமைக்காகவும் வல்லமைக்காகவும் ஏங்குகின்றது என்றும் பேசிய திருத்தந்தை, இந்த அமைதிக்கு புனித பெனடிக்ட் மாபெரும் சாட்சியாக இருந்தார் என்றார்.

தமது அண்மை புனிதபூமி திருப்பயணம் பற்றியும் நினைவுகூர்ந்த அவர், அமைதி முதலில் கடவுளிடமிருந்து வரும் கொடை, எனவே அதன் வல்லமை செபத்தில் வேரூன்றியுள்ளது என்றும் தெரிவித்தார்.

அனைத்துப் பெரிய கலாச்சாரத்தின் வளர்ச்சியும் இறைவார்த்தையை தினமும் தியானிப்பதை அடிப்படையைக் கொண்டுள்ளன என்பதை அடைபட்ட துறவுமட வரலாறு கற்றுத் தந்துள்ளது என்றும் கூறிய அவர், அனைத்துவிதமான தன்னலத்தையும் அநீதியையும் எதிர்த்துப் போராடுவதற்கு இறைவார்த்தைத் தியானிப்பது உந்து சக்தியாக இருக்கின்றது என்றார்.

கிறிஸ்துவின் அருளால் நமக்குள்ளும் பிறருடனான உறவிலும் தீமையை மேற்கொள்ளக் கற்றுக் கொண்டு அமைதி மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கட்டுபவர்களாக மாறுமாறும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.