2009-05-25 14:16:11

அமைதியின் தூதுவர்களாக வாழ்வோம்


மே25,2009. ஹெலன் கெல்லர் புகழ்பெற்ற ஓர் அமெரிக்க எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் நடவடிக்கையாளர். இவர் இளவயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர். இம்மாதிரியான மனிதரில் இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற புகழையும் பெற்றவர். ஒருநாள் ஹெலன் கெல்லரைப் பார்ப்பதற்காகச் சென்ற ஒருவர், அவரிடம், “உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்” என்று கேட்டார். பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று ஹெலன் கெல்லர் சொல்வார் என எதிர்பார்த்திருந்த அவருக்குக் கிடைத்த பதில் ஆச்சரியமூட்டியது. ஆம். ஹெலன் கெல்லர் சொன்னார்: “இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்று கேட்பேன்” என்று. பேசவும் பார்க்கவும் முடியாமல் இருந்த ஹெலன் கெல்லர் போர்களை எதிர்த்து பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் என்று அவரைப் பற்றிய குறிப்புகள் சொல்லுகின்றன.

அன்பர்களே, அமைதி வேண்டும், சமஉரிமை வேண்டும் என்ற வார்த்தைகள்தான் இந்நாட்களில் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மாவீரன் போரில் வீரமரணம் அடைந்துவிட்டான். இனிமேல் புலிகள் இயக்கம் தமிழரின் உரிமைக்காக அமைதியான வழியில் போராடும், தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம், இத்திங்கள் முதல் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கின்றோம் என்று புலிகள் அமைப்புக் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு வவுனியா தடுப்பு முகாமைப் பார்வையிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், கருத்து வேறுபாடுகளையும் சமூக பாரபட்சங்களையும் நீக்கி அமைதியை உண்டாக்கும் வழிகளை இலங்கை அரசு மேற்கொள்ளவில்லையெனில் பழைய வரலாறு மீண்டும் திரும்பும் என்று அரசை எச்சரித்துள்ளார். “இரண்டாம் உலகப் போரின் தடுப்பு முகாம்களை இங்கு காண்கிறேன்” என்று ஐ.நா. மனித உரிமைகள் இணைப்பாளர் ஜெர்சன் பரான்டோ கூறியுள்ளார். ஐ.நா.பொதுச் செயலருடன் அங்குச் சென்ற த டைம்ஸ் தினத்தாள் நிருபர் ஒருவர், “உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு முகாம்களில் ஒன்றான வவுனியா மனிக் பார்ம் முகாமில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது எதிர்ப்பார்ப்புகள் தகர்க்கப்பட்டு முள்கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். உரிமையில் பிறப்பது அமைதி என்பதால் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களும் அவர்கள் வாழுகின்ற நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

தமிழக வாரஇதழ் ஒன்றின் இவ்வாரப் பிரசுரத்தை வாசித்த போது அதில் “அமைதிக்குப் பங்கம்? ” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு வெளியிடப்பட்டிருந்தது. அமைதிக்கு பங்கமா? என்ற ஆதங்கத்தில் அதை வாசித்தால், “சாலையோரமாக அம்பேத்கார் சிலை இருந்த இடத்தில் திடீர் என்று மணிமண்டபம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அமைதியாக இருக்கின்ற சிவகாசி பகுதியில் கலவரம் வெடிக்கப் போகிற நிலவரம் தெரிகிறது” என்று இருந்தது. ஒருசிலை விவகாரம் சாதிக் கலவரத்துக்குப் பிள்ளையார்சுழி போட்டுள்ளது. இன்று நாடுகளிலும் வீடுகளிலும் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் பிரச்சனைகளுக்கு மூலகாரணம் பல நேரங்களில் ஒரு சிறு விவகாரமாகவே இருக்கின்றது.

துப்பாக்கிச் சப்தங்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் அமைதி கிட்டாது. அது நீதியின் உரிமையின் அடிப்படையில் பிறக்க வேண்டும். அமைதி என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். சமுதாயத்தில் ஒழுங்கின்மை இல்லாதநிலை எனவும் இதனைச் சொல்லுவதுண்டு. திருத்தந்தை ஆறாம் பவுல், “அமைதியை அடைவதற்கு அமைதியைப் போதி, அமைதிக்கான உண்மையான ஆயுதம் மனித உரிமைகளைக் காப்பது” என்றார். மகாத்மா காந்தி, “நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம்” என்றார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம். தனிப்பட்டவர் வாழ்வைப் பொருத்தவரை, அமைதி என்பது, வன்முறைசாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளது. இந்த புரிதலின்படி, ஒருவர் தனது சொந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைதி பெறுதல் என்ற ஒரு நிலையும் உண்டு. இது மன அமைதி அல்லது நிம்மதி என்பதோடு தொடர்புடையது.

“மனசே சரியில்லை” என்று சில சமயங்களில் நாம் சொல்கிறோம். மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் சரிவர ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது. திடீர் திடீர் என்று கோபம் வரும். அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள். மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும். தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு பலர் உறங்குவதற்கு மனஅமைதி இன்மையே காரணமாகும். மனஅமைதியின்மை புகை, மது, மங்கை என்ற தவறான வழிகளுக்கும் இட்டுச் செல்லும். மனஅமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. இந்த மனஅமைதி இரண்டு வகையில் கெடுகின்றது என்று உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒன்று ஒருவன் தனது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால் இழந்து விடுதல். இரண்டு மற்றவர்களால். இலங்கையில் தமிழ் மக்கள் பேரவலத்தை எதிர்நோக்குவதற்கு இந்த இரண்டாவது வகையைச் சுட்டிக் காட்டலாம்.

அமைதியாக வாழ வேண்டும் என்று நாம் எல்லாருமே விரும்புகிறோம். ஆனால் அமைதி எப்படி கிட்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஒருசமயம் அமைதி தேடி அலைந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் மரத்தடி ஒன்றில் வயதான துறவியைப் பார்த்தான். அவரிடம் அமைதியை அடைய ஆலோசனையும் கேட்டான். அவர் சொன்னார்- தம்பி, அது ஒன்றும் பெரிய விடயமல்ல, நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன், தூங்குகிற போது தூங்குகிறேன், அதனால் எப்பொழுதும் அமைதியாக இருக்கிறேன், ஆனால் பலர் சாப்பிடும் போது சாப்பிடுவதில்லை, தூங்கும் போது தூங்குவதில்லை, அதனால் அமைதியாக இருப்பதில்லை என்றார். அவனுக்கு அந்தப் பதில் கேலியாகப்பட்டது. அதனால் அத்துறவி அவனிடம் நீ வேண்டுமானால் என்னோடு சிலநாட்கள் தங்கு என்றார். அவனும் இசைந்தான். இருவரும் நடந்தார்கள். வழியில் ஒரு பயணிகள் சத்திரத்தில் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் சாப்பிடப் போனார்கள். துறவி அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞனோ, குழம்பில் உப்பு இல்லை, காரம் அதிகம் என்று பலவாறு குறை சொல்லிக் கொண்டிருந்தான். பின்னர் இருவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். துறவி அவனிடம், தம்பி, நான் தூங்கப் போகிறேன். வேண்டுமானால் நீயும் தூங்கு என்று சொல்லிவிட்டுத் தூங்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவனுக்கோ பலவகையான எண்ணங்கள். புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். உறக்கத்திலிருந்து எழுந்த துறவி இளைஞனின் கேள்விக்குப் பதில் சொன்னார் - தம்பி, நீ சாப்பிடும் போது உண்மையாகவே சாப்பிடவில்லை. உன் கவனம் எல்லாம் குழம்பில் உப்பையும் காரத்தையும் தேடியதே தவிர பசியைப் பற்றிக் கவனிக்கவில்லை. தூங்கும் போதுகூட எதைஎதையோ நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்துவிட்டாய். பலரும் இப்படித்தான். ஒருவர் எதைச் செய்கிறாரோ அதில் முழுக் கவனமும் ஈடுபாடும் காட்டுவதில்லை. அவரின் மனம் எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. அப்புறம் எப்படி அமைதி கிட்டும்? எனவே நீ எதைச் செய்கிறாரோ அதில் உனது முழுக் கவனமும் இருந்தால் உனக்கு அமைதி தானாகக் கிட்டும் என்றார். ஆம். நமக்கு வேண்டிய அமைதி நாம் செய்யும் செயலிலே இருக்கின்றது.

அன்பர்களே, மே29, வருகிற வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிப் படையின் சர்வதேச நாள். 1948ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைதிப்படை இன்று 63 இடங்களில் தனது பணியைச் செய்து வருகிறது. போரினால் சிதைந்த நாடுகளில் அமைதியை நிலைநாட்ட இப்படையினர் உதவி வருகின்றனர். இவ்வமைதிப் பணியில் உயிரிழந்தவர்களுக்கு இந்நாளில் சிறப்பஞ்சலி செலுத்தப்படுகிறது. அமைதி யுத்தம் போன்றது, அது நடத்தப்பட வேண்டும் என்கிறார் ஐ.நா.அதிகாரி.

இயேசு சொன்னார்- அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என்று. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறன்று கிறிஸ்துவின் அருளால் நமக்குள்ளும் பிறருடனான உறவிலும் தீமையை மேற்கொள்ளக் கற்றுக் கொண்டு அமைதியைக் கட்டுபவர்களாக RealAudioMP3 மாறுமாறு அழைப்புவிடுத்தார்

சுவாமி விவேகானந்தர், அமைதி என்ற தனது கவிதையில், அறிந்து கொள் நண்பா, ஆற்றலிடம் மட்டுமே வரும் அமைதி. சக்தியாய்த் தோன்றாத சக்தி, இருளில் இருக்கும் ஒளி, ஒளிப்பிழம்பின் நிழல் அமைதி. பேசாத பேருவகை, சோகப்படாத பெரும் துக்கம், வாழாத அமர வாழ்வு, அஞ்சலி பெறாத முடிவில்லா மரணம் அமைதி. இன்பமும் அல்ல துன்பமும் அல்ல. இடைப்பட்டது அமைதி. இரவும் அல்ல பகலும் அல்ல. இவற்றை இணைப்பது அமைதி என்று சொல்லியிருக்கிறார். அன்னை தெரசாவும், அமைதியின் பலன் பிரார்த்தனை. பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை. நம்பிக்கையின் பலன் அன்பு. அன்பின் பலன் சேவை. சேவையின் பலன் அமைதி என்றார்.

இக்காலத்தில் நாட்டிலும் வீட்டிலும் தனியாளிலும் தேடப்படுவது அமைதி அமைதி அமைதி. இறையருளைப் பெறுபவர்கள் அமைதி வழங்குபவர்கள் என்று சொல்கிறார்கள். வத்திக்கான் வானொலிக் குடும்பத்தினராகிய நாம் ஒவ்வொருவரும் அமைதியின் தூதுவர்களாகச் செயல்படுவோமா








All the contents on this site are copyrighted ©.