2009-05-23 13:37:46

இலங்கைச் சண்டையில் சர்வதேச ஒப்பந்தங்களால் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன, மனிதாபிமானப் பணியாளர்


மே23,2009. இலங்கை இராணுவம், தமிழ் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதிக் கட்ட சிலநாட்கள் தாக்குதலில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ள மனிதாபிமானப் பணியாளர் ஒருவர் கூறினார்.

சர்வதேச ஒப்பந்தங்களால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், வேதியக் குண்டுகள் போன்ற ஆயுதங்களைத் தாராளமாகப் பயன்படுத்தியதால் பெருமளவான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று சி.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் உரைத்த அவர், இராணுவம் இவ்வாறு பயன்படுத்தியது மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம் என்றார்.

போர் நடந்த வன்னிப் பகுதி இறந்தோரைப் புதைக்கும் இடமாக காட்சியளிக்கின்றது என்றும் அங்கு எந்தக் கட்டிடங்களும் ஆலயங்களும் இல்லை, அவை முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் அப் பணியாளர் தெரிவித்தார்.

போரினால் ஏறத்தாழ மூன்று இலட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இன்னும், வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக இந்தியாவிலிருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 டன் மருந்துகள் இவ்வெள்ளிக்கிழமை இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில், 27 மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் அனுப்பிவைக்கப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.